முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 3ம்தேதி விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டார். இதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்க அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கை விரைந்து மீண்டு வருகிறது. சேத விவரங்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வரும் சூழ்நிலையிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், பெஞ்சல் புயலால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து தமிழகத்தை மீட்க முதற்கட்ட ஆய்வின்படி தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுவதாக குறிப்பிட்டு, பாதிப்புகளின் அளவு மற்றும் மறுசீரமைப்பின் அவசர தேவையைக் கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை உடனே விடுவிக்க வலியுறுத்தினார்.
ஒன்றிய பல்துறை குழுவை அனுப்பி சேத விவரங்களை கணக்கிடவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க தமிழகத்தில் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து களஆய்வு மேற்கொள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் ஒன்றிய விவசாய மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் கே.பொன்னுசாமி, ஒன்றிய நிதித்துறை அமைச்சகத்தின் செலவினத்துறை இயக்குநர் சோனா மணி ஹாபாம், ஒன்றிய ஜல்சக்தி துறை இயக்குநர் சரவணன், ஒன்றிய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முன்னாள் பொறியாளர் தனபாலன் குமரன், ஒன்றிய எரிசக்தித் துறை உதவி இயக்குநர் ராகுல், பாட்ச்கேட்டி, ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் பாலாஜி ஆகியோர் நேற்று முன்தினம் தமிழகம் வந்தனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் விளக்கப்பட காட்சிகள் மூலம் பாதிப்புகள் நிலவரம் காண்பிக்கப்பட்ட நிலையில், நேரடியாக மாவட்டங்களுக்கு களஆய்வு செல்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று ஒன்றிய குழுவினர் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரடி கள ஆய்வினை தொடங்கினர். முதலில் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்த ஆய்வுக் குழுவை ஆட்சியர் பழனி வரவேற்றார். தொடர்ந்து விக்கிரவாண்டி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூட கட்டிடத்தையும், அதில் வைக்கப்பட்டிருந்த மழையால் சேதமடைந்த விளைபொருட்கள் விவரத்தையும் ஆய்வு செய்தனர்.
அப்போது, பல மூட்டைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து பம்பை ஆற்று வெள்ளத்தால் சேதமடைந்திருந்ததை பார்வையிட்ட குழுவினரிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதிப்புகளை விளக்கி கூறினர். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள சேத மதிப்பீடு தொடர்பாக அனைத்து துறையினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஒன்றிய குழுவினர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது வேளாண்மை, பொதுப்பணித்துறை, வருவாய்துறை உள்ளிட்ட துறைகள் வாரியாக வெள்ள பாதிப்பு, சேதங்களின் மதிப்பீடு குறித்து புகைப்படங்களுடன், எழுத்துப்பூர்வமாகவும் தெரிவித்தனர்.
இதனை பெற்றுக் கொண்ட அக்குழுவினர் அவர்களிடம் மேலும் சில சந்தேகங்களை கேட்டறிந்தனர். இந்த கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நடைபெற்றது. தொடர்ந்து கூட்டம் முடிந்ததும் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 2 பிரிவுகளாக ஒன்றிய குழுவினர் பிரிந்தனர். உள்துறையின் பேரிடர் இணை செயலாளர் ராஜேஷ்குப்தா தலைமையில் ஒரு குழுவும், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் பாலாஜி தலைமையில் மற்றொரு குழுவும் தனித்தனியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று சேதமடைந்த சாலைகள், பயிர்கள், ஆறுகள், குடியிருப்புகள் சேதம் குறித்து ஆய்வு செய்தனர்.
ஒரு குழு காணை வயலாமூர், அரகண்டநல்லூர் பகுதிகளிலும், மற்றொரு குழுவினர் அதிகம் பாதிப்புக்குள்ளான திருவெண்ணைநல்லூர், அரசூர் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வெள்ளப் பாதிப்புகளின் விவரங்களை கேட்டறிந்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் நகராட்சி பகுதிகளில், தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த பகுதிகளை ஒன்றிய குழு பார்வையிட்டது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 20 இடங்களில் ஒன்றிய குழு ஆய்வு மேற்கொண்டு வெள்ளசேத விவரங்களை கணக்கெடுத்தது.
அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, நெடுஞ்சாலைத் துறை செயலாளர் செல்வராஜ், அரசு போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக், ஊரக வளர்ச்சிதுறை இயக்குநர் பொன்னையா, ஆட்சியர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளச் சேத பாதிப்பு குறித்து ஒன்றிய குழுவுக்கு விரிவாக எடுத்துரைத்து பார்வையிட அழைத்து சென்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வை முடித்து கொண்ட பின்னர் கடலூருக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு நெய்வேலி என்எல்சி விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் குழுவினர் இன்று கடலூர், புதுச்சேரியில் ஆய்வு செய்கின்றனர். பின்னர் ஒன்றியகுழு மீண்டும் முதலமைச்சரை சந்தித்தபின், ஒன்றிய அரசிடம் புயல், வெள்ள பாதிப்பு குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
* ஆற்றில் இறங்கி குறைகேட்பு
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இரு பிரிவாக பிரிந்து சென்றதில் ராஜேஷ்குப்தா தலைமையிலான குழு அரசூர் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தது. அப்போது மலட்டாறு தண்ணீரில் இறங்கி கரைகள், பாலங்கள் பாதிக்கப்பட்டதை பார்வையிட்டனர். அங்கிருந்த விவசாயிகள், பொதுமக்களை அழைத்த ஒன்றிய குழுவினர் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், மலட்டாறு எங்கு செல்கிறது, தண்ணீர் எங்கு கலக்கிறது என்ற விவரத்தை கேட்டறிந்தனர். வெள்ளம் கரைபுரண்டு ஓடிய ஆற்றில் இறங்கி ஒன்றிய குழு ஆய்வு செய்ததை அங்கிருந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர். தொடர்ந்து திருவெண்ணைநல்லூர், சிறுமதுரை பகுதிகளில் ஆய்வு செய்த குழுவினர், தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சென்றனர்.
The post பெஞ்சல் புயல், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 20 இடங்களில் ஒன்றிய குழு ஆய்வு: கடலூர், புதுச்சேரியில் இன்று பார்வையிடுகின்றனர் appeared first on Dinakaran.