×

ஆஸி.யுடன் 2வது டெஸ்டில் பல் இளித்த பவுலிங்… பரிதாப பேட்டிங்! தோல்வியின் விளிம்பில் இந்தியா

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்டின் 2வது நாளில், 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா மோசமாக ஆடி, 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்னுடன் தோல்வியின் விளிம்பில் உள்ளது. ஆஸி சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. பெர்த் நகரில் முடிந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், அடிலெய்ட் நகரில் நேற்று முன்தினம் பகலிரவு ஆட்டமாக பிங்க் பந்துடன் நடந்த 2வது டெஸ்டின் முதல் நாளில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்சில் இந்தியா மோசமாக ஆடி 180 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸி அணி ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்திருந்தது.நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸி நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடியது. மார்னஸ் லபுஷனே 64 எடுத்து அவுட்டானார். டிராவிஸ் ஹெட் 141 பந்துகளை சந்தித்து 140 ரன் குவித்தார். இறுதியில் ஆஸி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன் எடுத்தது. பும்ரா, முகம்மது சிராஜ் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

ஆஸி அணி 157 ரன் முன்னிலை பெற்ற நிலையில் இந்தியா 2வது இன்னிங்சை ஆடியது. துவக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24, கே.எல்.ராகுல் 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர். பின் வந்த சுப்மன் கில் 28, விராட் கோஹ்லி 11, கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்னில் அவுட்டாகி அணியை பரிதாப நிலைக்கு தள்ளினர். நேற்றைய ஆட்ட நேர இறுதியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 28, நிதிஷ் குமார் ரெட்டி 15 ரன்னுடன் களத்தில் உள்ளனர். போட்டி முடிய இன்னும் 3 நாட்கள் உள்ளன. இந்தியாவின் கையில் மீதம் 5 விக்கெட்டுகளே உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இன்னும் 29 ரன்கள் தேவை. எனவே, இந்த போட்டியில் ஆஸி வெல்வது அநேகமாக உறுதி ஆகி விட்டது.

The post ஆஸி.யுடன் 2வது டெஸ்டில் பல் இளித்த பவுலிங்… பரிதாப பேட்டிங்! தோல்வியின் விளிம்பில் இந்தியா appeared first on Dinakaran.

Tags : Aussie ,India ,Adelaide ,Australia ,cricket ,Border Kawasaki Cup ,Dinakaran ,
× RELATED சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற...