- ஸ்ரீ பெரம்புதூர் அரசு மருத்துவமனை
- தமிழ்நாடு அரசு
- ஸ்ரீபெரும்புதூர்
- சுப்ரியா சாஹு
- மேலதிக
- பிரதம செயலாளர்
- மருத்துவம் மற்றும் பொது நலத்துறை
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவதற்காக ரூ.3.22 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது: ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை 1952ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 16 பேரூராட்சிகள் மற்றும் 132 கிராமங்களுக்கு ஓர் முக்கிய மருத்துவ மையமாக திகழ்கிறது. 53 படுக்கைகளுடன் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனை ஆண்கள் மற்றும் பெண்கள் சிகிச்சை பிரிவுகள், குழந்தைகள் நல பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தொற்று நோய்களுக்கான சிகிச்சை பிரிவுகளை கொண்டு பல்வேறு மருத்துவ சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
சென்னை-வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்நாடியாக விளங்குவதுடன் உடனடி அவசர சிகிச்சை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், குறிப்பிடத்தக்க வகையில் இம்மருத்துவமனையில் சராசரியாக 838 வெளி நோயாளிகள் மற்றும் 51 உள்நோயாளிகள் நாள் தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றியமையாத மருத்துவ சேவைகள் புரியும் இந்த மருத்துவமனையை வலுப்படுத்த வேண்டிய தேவையின் அவசியத்தை அறிந்து, உலக வங்கியின் நிதியுதவியுடன் மருத்துவமனையை மேம்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து, இதனை நடைமுறைப்படுத்தும் விதமாக இன்று தமிழ்நாடு அரசு, ரூ.3.22 கோடி நிதியை ஒதுக்கி கீழ்கண்ட பணிகளை மேற்கொள்வதற்கு ஆணை பிறப்பித்துள்ளது.
அதில், டயாலிசிஸ் இயந்திரத்தை நிறுவுதல், சிடி ஸ்கேன் கருவியை வழங்குதல் மற்றும் சிடி ஸ்கேன் கருவியை நிறுவுவதற்கு தேவையான கட்டடம் மற்றும் மின்னினைப்பு பணிகள் உயர்தர மருத்துவ சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக, மருத்துவமனையின் திறனை விரிவுபடுத்துவதும், அத்தியாவசிய தேவைகளுக்கு நோயாளிகள் பிற அரசு மருத்துவமனைகளை சார்ந்திருப்பதை குறைப்பதும் இம்மேம்பாட்டின் நோக்கமாகும். இதன் மூலம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள மக்களுக்கு மேம்பட்ட மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய மருத்துவ சேவையை உறுதி செய்யப்படும்.
The post ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த ரூ.3.22 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.