×

குன்றத்தூர் – போரூர் இடையே மழையால் சேதமான பிரதான சாலை சீரமைப்பு: நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை

குன்றத்தூர்: குன்றத்தூர் – போரூர் இடையே பெஞ்சல் புயல் மழையால் சேதமான பிரதான சாலை, ஸ்ரீபெரும்புதூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கையால் சீரமைக்கப்பட்டது. சென்னை புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள குன்றத்தூர் – போரூர் சாலை போக்குவரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதான சாலையாக உள்ளது. இச்சாலை வழியாக குன்றத்தூரில் இருந்து போரூர் வழியாக வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர் ஆகிய சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் எளிதாக சென்றுவர முடிகிறது.

மேலும், போரூரில் இருந்து குன்றத்தூர் வழியாக திருமுடிவாக்கம் சிட்கோ மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாகவும் இச்சாலை அமைந்துள்ளது. இவ்வளவு, முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை வழியாக ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பன்னாட்டு தொழிற்சாலை வாகனங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக லாரிகள் வந்து செல்கின்றன. இவைமட்டுமின்றி கார், வேன், அரசு பேருந்து உள்ளிட்ட பெரும்பாலான வாகனங்களும் சாலையை பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், சாலையின் பெரும்பாலான இடங்களில் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதனால் சேதமடைந்த குன்றத்தூர் – போரூர் சாலையை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் குன்றத்தூர் – போரூர் சாலை பகுதியில் உள்ள குண்டும், குழியுமான பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

The post குன்றத்தூர் – போரூர் இடையே மழையால் சேதமான பிரதான சாலை சீரமைப்பு: நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags :
× RELATED குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள்...