அனைத்து விளைபொருட்களும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உறுதி

டெல்லி: மோடி அரசு அனைத்து விவசாய விளைபொருட்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் என்று ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலங்களவையில் தெரிவித்தார். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து டெல்லிக்கு பாதயாத்திரையாக செல்லத் தொடங்கியுள்ள நிலையில், மாநிலங்களவையில் துணை கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சிவராஜ் சிங் சவுகான், “விவசாயிகளின் அனைத்து விளைபொருட்களும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்கப்படும் என்பதை உங்கள் (அவைத் தலைவர்) மூலம் நான் அவைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இது மோடி அரசாங்கம். மோடியின் உத்தரவாதத்தை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் இது.

ஆனால், தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் நண்பர்கள் ஆட்சியில் இருந்தபோது, ​​எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை ஏற்க முடியாது என கூறியதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். குறிப்பாக விளைபொருட்களின் உற்பத்தி விலையை விட 50% கூடுதலாக வழங்க முடியாது என அவர்கள் கூறியதன் பதிவு என்னிடம் உள்ளது.” என தெரிவித்தார். அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு: மதிய உணவு இடைவேளைக்குப் பின் மாநிலங்களவையை துணைத் தலைவர் ஹர்ஷ்வந்த் நடத்தினார். அப்போது, ஐ.யு.எம்.எல் கட்சியைச் சேர்ந்த எம்பி அப்துல் வஹாப், நீதி மன்றங்களில் அதிக எண்ணிக்கையில் வழக்குகள் நிலுவையில் உள்ளது பற்றிப் பேசினார். அப்போது அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, உறுப்பினர்களை சமாதானப்படுத்த துணைத் தலைவர் முயன்றார். எனினும், அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

The post அனைத்து விளைபொருட்களும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: