×

ஜூனியர் ஆசிய கோப்பை: இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

ஷார்ஜா: ஜூனியர் ஆசிய கோப்பை அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதின. 8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் பாகிஸ்தான், இந்தியா (ஏ பிரிவு), இலங்கை , வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில், இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை – இந்தியா அணிகள் ஆடின.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 173 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் லக்வின் அபேசிங்க 69 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் சேத்தன் சர்மா 3 விக்கெட், ஆயுஷ் மத்ரே, கிரண் சோர்மலே ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மத்ரே மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் இலங்கையின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இதில் ஆயுஷ் மத்ரே 34 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் இறங்கிய ஆண்ட்ரே சித்தார்த் 22 ரன்னில் அவுட் ஆனார்.

மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் அடித்த நிலையில் 67 ரன்னுக்கு அவுட் ஆனார். இதையடுத்து முகமது அமான் மற்றும் கே.பி.கார்த்திகேயா ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இறுதியில் இந்தியா 21.4 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி இறுதிப்போட்டியில், பாகிஸ்தான்- வங்காளதேசம் இடையிலான அரையிறுதியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும்.

The post ஜூனியர் ஆசிய கோப்பை: இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா appeared first on Dinakaran.

Tags : Junior Asian Cup ,India ,Sri Lanka ,Sharjah ,11TH JUNIOR ASIAN CUP ,UNITED ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு இந்தியா ரூ.237 கோடி நிதியுதவி