×

காரைக்கால் மீனவர்கள் 18 பேர் துப்பாக்கி முனையில் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

காரைக்கால்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்காலை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். பெஞ்சல் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஒரு வாரத்துக்கு பிறகு நேற்றுமுன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். காரைக்கால் அடுத்த காசகுடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த 18 மீனவர்கள் விசைப்படகில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்றனர்.

இரவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடற்பரப்பில் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், காரைக்கால் மீனவர்களின் விசைப்படகை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 மீனவர்களையும் கைது செய்தனர். இதையடுத்து விசைப்படகு மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான மீன்கள், மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை படகுடன், இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

* ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் விடுதலை 3 ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த நவ. 9ம் தேதி கடலுக்குச் சென்ற 3 விசைப்படகுகளையும், அதிலிருந்த 23 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்தது. யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்களின் காவல் நேற்று முடிந்ததால், ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், 20 மீனவர்களை விடுதலை செய்தார். விசைப்படகு ஓட்டுநர்கள் 3 பேருக்கு தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தார்.

The post காரைக்கால் மீனவர்கள் 18 பேர் துப்பாக்கி முனையில் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Sri Lanka Navy ,Karaikal district ,Storm Benjal ,Dinakaran ,
× RELATED தொடரும் அட்டூழியம்..! எல்லை தாண்டி மீன்...