- மோடி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு
- யூனியன்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பெஞ்சல் புயல்
- தின மலர்
சென்னை: தமிழகத்தில் பெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தொலைபேசியில் பேசி கேட்டறிந்தார். அப்போது, சேத மதிப்புகளை கண்டறிய ஒன்றிய குழுவை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக விழுப்புரம் மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் சென்று ஆய்வு செய்தார்.
அங்கு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற முதல்வர், நிவாரண உதவிகளை வழங்கினார். பாதிப்பு மற்றும் சேதம் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பெஞ்சல் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட சேதத்துக்கு தற்காலிக சீமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது.
இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி உடனடியாக வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று காலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக முதல்வரிடம் விரிவாக கேட்டறிந்ததுடன், தமிழகத்துக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும் என முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி என்னை தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். மாநில அரசு பேரிடர் பாதிப்பை திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களை கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்த புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி – புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றிய குழுவை அனுப்பி வேண்டும் என்ற எனது கடிதத்தை குறிப்பிட்டு, இதுகுறித்து மீண்டும் வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டின் இந்த கோரிக்கையை பிரதமர், உடனடியாக பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்”. இவ்வாறு அதில் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய குழு இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
The post தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் போனில் கேட்டறிந்தார் மோடி: ஒன்றிய குழுவை உடனடியாக அனுப்பி வைக்க கோரிக்கை appeared first on Dinakaran.