×

வெள்ளம் காரணமாக ரயில்கள் நிறுத்தம் நிவாரணம் கோருவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க முடியாது: ரயில்வே துறையிடம் முறையிட ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: புயல் மழை காரணமாக, விழுப்புரம் வழியாக சென்னை வர வேண்டிய ரயில்கள், அரக்கோணம் வழியாக திருப்பி விடப்பட்டன. இந்நிலையில், மாம்பழபட்டு எனும் ரயில் நிலையத்தில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை 10 மணி நேரம் நிறுத்தி வைத்ததுடன் எந்த உதவிகளையும் வழங்காததால் பயணிகள் பாதிக்கப்பட்டதாக வழக்கறிஞர் எம்.சி.சாமி தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையிட்டார்.

அப்போது அவர், உணவு, தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும், தலா 5 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், பயணச்சீட்டு கட்டணத்தை திருப்பித் தரவும் ரயில்வே துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், ரயிலில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி, எவரும் வேண்டுமென்றே இதுபோல் செயல்பட மாட்டார்கள். அவர்களின் நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக ரயில்வே துறைக்கு மனு அளிக்கலாம். இந்த விவகாரம் தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளில் யாரும் வேலை செய்ய வில்லை எனக் கூறமுடியாது. இளைஞர் இறந்திருந்தால் அது குறித்து கவனிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

The post வெள்ளம் காரணமாக ரயில்கள் நிறுத்தம் நிவாரணம் கோருவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க முடியாது: ரயில்வே துறையிடம் முறையிட ஐகோர்ட் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : ICourt ,Railway Department ,CHENNAI ,Villupuram ,Arakkonam ,Pandyan Express ,Mambazapattu railway station ,
× RELATED மழை வெள்ளம் காரணமாக ரயில்கள்...