பெரம்பூர்: பெரம்பூர் லட்சுமி நகர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் முகமது அலி ஷகீல் (34), ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு திருவிக நகர் தீட்டி தோட்டம் 7வது தெரு பகுதிக்கு சவாரி வந்துள்ளார். அப்போது பாபு (60) என்பவர் வீட்டின் முன்பு ஓரமாக ஆட்டோவை நிறுத்திவிட்டு சவாரிக்கு வந்த நபரை இறக்கி விட்டு விட்டார். அப்போது, அவரது செல்போனில் அழைப்பு வந்ததால், ஆட்டோவில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். திடீரென ஆட்டோ நிறுத்தப்பட்டு இருந்த இடத்தின் மேலே இருந்த பாபு என்பவர் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்தது. இதில் ஆட்டோ முழுவதும் அப்பளம் போல நொறுங்கியது. பலத்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுகுறித்து திருவிக நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் குறிப்பிட்ட அந்த வீடு பாபு என்பவருக்கு சொந்தமானது என்பதும், கடந்த 50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட வீடு என்பதும் சொத்து பிரச்னை காரணமாக வீட்டை முறையாக பராமரிக்காமல் பாபு வீட்டின் பின்புறம் இருந்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பாபு குடும்பத்தை அந்த வீட்டிலிருந்து அப்புறப்படுத்திய திருவிக நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பால்கனி இடிந்து விழுந்த சமயம் தொலைபேசி அழைப்பு வந்ததால் ஆட்டோ டிரைவர் எதேச்சையாக நகர்ந்து சென்றதால் அவர் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
The post வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து ஆட்டோ சேதம்: செல்போன் அழைப்பால் டிரைவர் தப்பினார் appeared first on Dinakaran.