திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபமலையில் மண் சரிவால் பாறைகள் விழுந்து வீடு புதைந்ததில் 5 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 36 மணி நேரம் போராடி மேலும் 2 பேரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்தது. இந்நிலையில், திருவண்ணாமலை வ.உ.சி நகர் பகுதியில், தீபம் ஏற்றும் மலையில், கடந்த 1ம் தேதி மாலை திடீரென மழை வெள்ளத்தால் மண்சரிவு ஏற்பட்டு, பாறைகளும் உருண்டன. அதனால், மண் சரிவில் கூலித்தொழிலாளி ராஜ்குமார் என்பவரது வீடு மண்ணுக்குள் புதைந்தது. இதில் ராஜ்குமார்(32), அவரது மனைவி மீனா(26), குழந்தைகள் கவுதம்(9), மகள் இனியா(7) மற்றும் உறவினர்களின் குழந்தைகளான மகா (12), ரம்யா(12), வினோதினி(14) ஆகிய 7 பேர் மண் சரிவுக்குள் சிக்கினர்.
தகவலறிந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்பி சுதாகர் ஆகியோர் களத்துக்கு சென்று மீட்புப்பணிகளை விரைவுபடுத்தினர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று முன்தினம் இரவு மண் சரிவு ஏற்பட்ட இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மண்சரிவில் சிக்கியிருந்த மீனா, வினோதினி, கவுதம், இனியா, மகா ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. பாறைகளை உடைக்க வேண்டியிருந்ததால் இருவரின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. பெரும் போராட்டத்துக்கு பின் மீட்பு குழுவினர் நேற்று பகல் 1 மணியளவில் ராஜ்குமாரின் உடலையும், மாலை 4.45 மணியளவில் சிறுமி ரம்யாவின் உடலையும் மீட்டனர். தொடர்ந்து 36 மணி நேரம் நீடித்த மீட்புப்பணி முடிந்ததை தொடர்ந்து, அந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி வல்லுநர்கள் குழு ஆய்வு: 2 நாளில் அரசிடம் அறிக்கை
திருவண்ணாமலை மலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்ைத ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் அந்த இடத்தில் ஐஐடி பேராசிரியர்கள் கொண்ட வல்லுநர் குழு ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கும் என தெரிவித்திருந்தனர். அதன்படி, நீர் மேலாண்மை மற்றும் புவியியல் துறையில் 35 ஆண்டு அனுபவம் பெற்ற வல்லுநர்களான சென்னை ஐஐடி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் மோகன், பூமிநாதன், நாராயணராவ் ஆகியோர் கொண்ட குழு, நேற்று திருவண்ணாமலை மலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
பின்னர் வல்லுநர் குழுவினர் கூறுகையில், திருவண்ணாமலை மலை மண்ணும், பாறைகளும் இணைந்ததாக உள்ளது. இங்கு வீடுகள் கட்டி குடியிருக்க உகந்த இடமில்லை. மலையில் இருந்து வடிந்து வரும் மழை வெள்ளத்தின் அடர்த்தி அதிகமாக இருக்கும்போது, பாறைகளின் கீழ் உள்ள மண் அரிப்பு ஏற்படுவதால் மண்சரிவு ஏற்படுகிறது. மண்ணின் தன்மை மழையால் நெகிழ்ந்திருக்கும். எனவே, அடுத்தடுத்து பெருமழை ஏற்படும்போது பாதிப்புகள் ஏற்படலாம். எங்களுடைய அறிக்கையை 2 நாளில் தமிழ்நாடு அரசிடம் அளிப்போம் என்றனர்.
மண்சரிவில் உயிரிழந்த எஜமானை தேடும் நாய்
திருவண்ணாமலை வ.உ.சி நகர் பகுதியில் வசித்து வந்து மண் சரிவால் உயிரிழந்த ராஜ்குமார், தெருநாயை செல்லமாக வளர்த்து வந்தார். கடந்த 3 நாளாக அவரை காணாமல் தவித்த வந்த நாய், நேற்று மண் சரிந்து கிடந்த பகுதியில் மோப்பம் பிடித்தவாறு சோகத்துடன் சுற்றி சுற்றி வந்தது. இது அங்கிருந்தவர்கள் கவலையுடன் பார்த்தனர்.
The post தீபமலை மண் சரிவில் 5 பேர் சடலம் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 2 பேரின் உடல்கள் மீட்பு: 36 மணி நேரம் போராடிய மீட்பு குழு appeared first on Dinakaran.