சுபிக்ஷா பிரியாள்
‘‘ஃபேஷன் என்றால் எல்லோரும் டெய்லர் வேலைதானே என அசால்டாய் நினைக்கிறார்கள். டெய்லர் வேலைக்கும் ஃபேஷனுக்கும் சம்பந்தமே இல்லை…’’ புன்னகைத்தவாறே பேச ஆரம்பித்தார் நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் ஃபேஷன் தொடர்பான தனது பட்டப் படிப்பை முடித்திருக்கும் சுபிக்ஷா பிரியாள்.‘‘என்னோடு படித்தவர்கள் +2 முடித்து டாக்டர், இஞ்சினியர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் கனவுகளோடு நகர… ஆர்டிஸ்டிக் சைடுலதான் பயணிக்க வேண்டும் என நான் முடிவு செய்தேன். காரணம், நான் எப்பவுமே வரைவது… பெயின்டிங் செய்வது… எதையாவது டெக்ரேட்டிவாக செய்து பார்ப்பது என கலை கண்ணோடுதான் எதையும் அணுகுவேன். எனக்கு இந்த அறிவியல்… கணக்கு… வரலாற்றுப் பாடங்களில் பெரிதாக விருப்பம் இல்லாமலே போனது. அம்மாவும் என்னைச் சரியாகப் புரிந்து வைத்திருந்ததால், இஞ்சினியரிங் படி, மருத்துவம் படி என்றெல்லாம் அழுத்தங்களைத் தரவில்லை.
கலை சார்ந்த கல்லூரியில் நுழைந்து கிரியேட்டிவான படிப்பை படிக்க விருப்பியே நிஃப்டில் விண்ணப்பித்தேன். +2 மதிப்பெண்களை இங்கு பெரிதாகப் பார்ப்பதில்லை. கலையில் ஆர்வம் இருந்தாலே நுழைவுத் தேர்வில் வெற்றிதான். ஆங்கிலம், கணக்கு, பொது அறிவு என மூன்றில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. கூடவே கிரியேட்டிவ் ஆப்டிடியூட் என்கிற தேர்வும் இருந்தது. இதை நான் ரொம்பவே சிறப்பாகச் செய்திருந்ததால் தேர்வானவர்கள் பட்டியலில் என் பெயரும் இருந்தது.
குறிப்பாக நிஃப்ட் போன்ற மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வை சந்திக்க வரும் மாணவர்கள், தங்களோடு தேர்வெழுத கூட்டம் கூட்டமாக வருகிற லட்சக்கணக்கான மாணவர்களைப் பார்த்ததுமே “நமக்கு இதில் இடம் கிடைக்குமா?” என பயந்து விடுகிறார்கள். இதில் பயப்பட எதுவும் இல்லை. நம்மிடம் கிரியேட்டிவ் தொடர்பான திறமை இருந்தால் கண்டிப்பாக வெற்றிதான்’’ என நம்பிக்கையை வெளிப்படுத்தியவர், ‘‘என்னுடன் தேர்வு எழுத வந்த சிலர் கோட்சிங் சென்டர்களுக்கு சென்றுவிட்டு வந்து தேர்வை சந்தித்தார்கள். நிஃப்ட் நுழைவுத் தேர்வில் நாம் பெறுகிற மதிப்பெண்களை வைத்தே எந்த கல்லூரி, எந்தத் துறை என்றெல்லாம் தீர்மானிக்கப்படும். நிஃப்ட் பொறுத்தவரை டாப்பில் இருப்பது டெல்லி. அடுத்து மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, புனே போன்ற கல்லூரிகள் வரும்.
இது தவிர்த்து சமீபத்தில் இன்னும் சில ஊர்களில் உள்ள கல்லூரிகளையும் இணைத்து, நிஃப்டுக்கு கீழ் 16 கல்லூரிகள் இந்தியா முழுவதும் செயல்படுகிறது. நான் படித்த சென்னை நிஃப்ட் தரவரிசையில் 3வது இடத்தில் இருந்தது.நமது பள்ளிகளின் பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை ஆப்பிள் வரைவதும், மாம்பழம் வரைவதுதான் ஆர்ட்டாக இருக்கும். இதைத் தாண்டி கல்லூரி பாடத்திட்டங்கள் குறித்த அறிவு பள்ளிகளில் பெரிதாக நமக்கு கிடைப்பதில்லை என்பதால், முதலாம் ஆண்டை முடித்து இரண்டாம் ஆண்டிற்குள் நுழைந்த போதுதான் எனக்கு ஃபேஷன் டிசைனிங் துறைக்குள் மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட்டது.
பொறியியல் படிப்பை போலவே இதுவும் நான்கு ஆண்டு படிப்பு. மாணவர்களுக்குள் இருக்கிற ஆர்டிஸ்டிக் திறனை வெளியில் கொண்டு வருகிற மாதிரியான கலை சார்ந்த பல்வேறு வகுப்புகள் இடம்பெறுவதால் முதலாம் ஆண்டு எல்லோருக்கும் பொதுவானது. இரண்டாம் ஆண்டிற்குள் நுழையும்போதுதான், எந்தத் துறையை நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பது மாணவர்களுக்கே புரிய வரும்.
முக்கியமாக இதில் ஃபேஷன் டிசைனிங், அக்செசரி டிசைன், லெதர் டிசைன், நிட்வேர் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், ஃபேஷன் கம்யூனிகேஷன், ஃபேஷன் டெக்னாலஜி என்கிற துறை சார்ந்த படிப்புகளுடன் கிராஃபிக்ஸ் டிசைனிங் துறையும் இருக்கிறது. டிசைனிங் இல்லாமல் டெக்னாலஜி பக்கம்தான் எனக்கு விருப்பம் என்கிற மாணவர்கள் அதையும் தேர்ந்தெடுக்கலாம். இதில் நான் தேர்ந்தெடுத்தது நிட்வேர் டிசைன். அதாவது, பின்னலாடை வடிவமைப்புத் துறை. ஆசிரியர்கள் பலருடன் எங்களுக்கு எப்போதும் இன்ட்ராக் ஷன் இருந்து கொண்டே இருக்கும். அதாவது, இப்போது டிரெண்டில் இருக்கிற விஷயங்கள், பிற நிறுவனங்கள் என்ன செய்கிறார்கள் என்கிற ஆராய்ச்சி, பிரசன்டேஷன், வரைந்து பார்ப்பது, வரைந்தவற்றை டெக்னாலஜியினை பயன்படுத்தி 3டி வெர்ஷனில் கொண்டு வருவது, பேட்டன் செய்வது, தயாரிப்பு என பல்வேறு கட்ட செயல்பாடுகள் கற்றுத்தரப்படும்.
ஃபேஷன் துறையில் தேர்வை ஜுரி என்பார்கள். நான்காம் ஆண்டு நிறைவடையும் போது இன்டன்ஷிப் உண்டு. நான் பெங்களூரில் உள்ள நிட்வேர் நிறுவனம் ஒன்றில் என் இன்டன்ஷிப்பை நிறைவு செய்தேன். இறுதி ஆண்டில் கேம்பஸ் மூலம் வேலை வாய்ப்பும் உண்டு. ரிலையன்ஸ், மேக்ஸ், டிரன்ட்ஸ், ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு கீழ் வருகிற ஒருசில ஆடை வடிவமைப்பு நிறுவனங்களும், நிஃப்ட் போன்ற மிகப்பெரிய கல்வி நிறுவனங்களின் மூலமாக வெளிவருகிற மாணவர்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். வருடத்திற்கு 200 மாணவர்களை பயிற்சியாளர்களாக மட்டுமே தேர்வு செய்வார்கள்.
ஆனால் மேற்குறிப்பிட்ட பிராண்டெட் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு ஃபேஷன் டிசைனிங் முடித்த மாணவர்கள் மட்டுமே. எங்களைப் போன்ற பிற துறை சார்ந்த மாணவர்களின் பங்களிப்பு அவர்களின் தயாரிப்புகளுக்கு எந்த அளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்நிறுவனங்களே தெரிந்து கொள்ளவில்லை. அடிடாஸ் போன்ற ஸ்போர்ட்ஸ்வேர் நிறுவனங்கள், எங்களைப் போன்ற நிட்வேர் டிசைனர்களையும் தேர்ந்தெடுத்தால் அதன் பலனை நிச்சயம் உணர்வார்கள்.
நிட்வேர் டிசைன் என்றதும் சிலர் ஸ்வெட்டர், மஃப்ளர், சாக்ஸ் தயாரிப்பு என்று நினைக்கிறார்கள்’’ எனப் புன்னகைத்த சுபிக்ஷா பிரியாள், ‘‘நிட்வேர் ஃபேஷன் என்பது ஆடை தயாரிப்பில் ஒருவித டெக்னிக். நாம் உடுத்தும் சேலை நெசவு. ஆனால் போடுகிற துணி நிட்வேர். பல்வேறு விஷயங்களை நிட்வேர் டெக்னிக் வழியாகச் செய்ய முடியும்’’ என்கிறார் நம்பிக்கையோடு.முக்கியமாக நிட்வேரோட மெஷினரி, எக்யூப்மென்ட்ஸ் சென்னையில்தான் அதிகம். மேலும், இத்துறை சார்ந்த எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் எக்ஸ்போஷர் கல்லூரியிலே எங்களுக்கு நிறையக் கிடைத்தது. எனது ஃபைனல் புராஜெக்டில் நிட்வேர் டிசைனில் நான் தேர்ந்தெடுத்தது, ஸ்போர்ட்ஸ் வேர். அதாவது, டென்னிஸ்வேர் உடைகளை எடுத்துச் செய்தேன்’’ என்றவர், ‘‘டெகத்லான் ஸ்போர்ட்ஸ் வேர் உடைகள் பெரும்பாலும் எங்கள் மாணவர்கள் டிசைன் செய்தவையே. எனவே நிட்வேர் துறையின் திறமை ஸ்போர்ட்ஸ்வேர் தயாரிப்பு நிறுவனங்களில் பெரிய அளவில் வெளிப்படும்’’ என விரல் உயர்த்தி உறுதி காட்டுகிறார் சுபிக்ஷா.
‘‘கல்லூரி மூலமாகக் கிடைக்கிற வேலை வாய்ப்பைவிட கேம்பஸ் விட்டு வெளியில் வந்து நாங்களாகவே வாய்ப்புகளைத் தேடும்போதுதான் எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் அமைகிறது. ஃபேஷன் துறையை பொறுத்தவரை டெல்லி, மும்பை, பெங்களூர் நகரங்களில் மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. இந்த நகரங்களில்தான் பிராண்டெட் நிறுவனங்கள் கஸ்டமர் பேஸ்டாக இயங்குவதே இதற்கு காரணம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நமது அருகாமை நகரமான திருப்பூர்தான் மெயின் மேனுபேக்சரிங் ஹப். இங்குள்ள ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றினால் கண்டிப்பாக வருமானம் அதிகம்தான். ஆனால் இங்கு பணியாற்ற எங்களை மாதிரியான இளைஞர்கள் விரும்புவதில்லை. குறைந்த வருமானம் என்றாலும், பெங்களூர், டெல்லி மாதிரியான ஹைடெக் சிட்டிகளை நோக்கியே வேலை வாய்ப்பைத் தேடி நாங்கள் நகர்கிறோம்’’ என்றவாறு விடைபெற்றார்.
ஃபேஷன் ஷோ எதற்கு?
‘‘ஃபேஷன் ஷோ மாதிரியான நிகழ்ச்சிகளில் மாடல்ஸ் அணிந்து வருகிற வித்தியாசமான விதவிதமான பிரமாண்ட உடைகள் கண்டிப்பாக நமது பயன்பாட்டிற்கான உடைகள் இல்லைதான். பிறகு எதற்கு இந்த ஷோக்கள் என நாம் நினைக்கலாம்.ஃபேஷனைப் பொறுத்தவரை, ஃபேஷன் டிசைன் மற்றும் ஃபேஷன் ஆர்ட் என இரண்டு இருக்கிறது. ஃபேஷன் ஷோக்களில் அணிந்து வருகிற ஆடைகள் ஃபேஷன் ஆர்ட்டில் வரும். இது முழுக்க முழுக்க நம் கிரியேட்டிவிட்டியை வெளிப்படுத்துகிற களம். நமது ஐடியாலஜியை பயன்படுத்தி உடைகளில் எதை வேண்டுமானாலும் நாம் கிரியேட்டிவாகப் பண்ணலாம்.
சின்ன நிறுவனம் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஃபேஷன் ஷோக்களைப் பார்த்தே அதில் இருந்து சிம்பிளான டிசைன்களை தேர்ந்தெடுத்து, வாடிக்கையாளர்கள் உடைகளை செய்து கொடுக்கிறார்கள். மிகப்பெரிய டாப் பிராண்டுகளும் அவர்களுக்கான ஐடியாக்களை இதிலிருந்து எடுத்தே சிம்பிள் டிசைனாக உடைகளில் அவற்றை மாற்றி ஷோரூம்களுக்கு அனுப்புகிறார்கள்.’’
ஸ்டைலிஸ்ட்
சினிமா உடை தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் டிசைனர் கிடையாது. ஏற்கனவே டிசைன் செய்யப்பட்டு தயாராக இருக்கும் உடைகளைத் தேர்ந்தெடுத்து, நடிகர்களுக்கு ஏற்ப ஃபிட் செய்து கொடுப்பது மட்டுமே இவர்களின் வேலை. இவர்கள் ஃபேஷன் டிசைனர் பிரிவில் வரமாட்டார்கள். இவர்களை ஸ்டைலிஸ்ட் என்றே அழைப்போம். ’’
தொகுப்பு :மகேஸ்வரி நாகராஜன்
The post ஃபேஷனில் நான் செய்வது நிட்வேர் டிசைனிங்! appeared first on Dinakaran.