மீனம்பாக்கம்: குவைத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் நடுவானில் பறந்தபோது தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் குவைத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் 154 பயணிகள் உட்பட 162 பேர் உயிர்தப்பினர். குவைத்தில் இருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 11.26 மணிக்கு குவைத்தில் இருந்து 154 பயணிகள், 8 விமான ஊழியர்களுடன் சென்னைக்கு புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார். அப்போது, குவைத் விமான நிலையம்தான் அருகில் இருக்கிறது என்பதை அறிந்து, குவைத் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். இதையடுத்து அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் குவைத் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது.
உடனடியாக விமான பொறியாளர் குழுவினர், விமானத்துக்குள் ஏறி தொழில் நுட்ப கோளாறை சரி செய்ய முயற்சி செய்தனர். ஆனால், உடனடியாக தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து குவைத்தில் இருந்து சென்னை வரும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, குவைத் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானம் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு வரும் என தெரி விக்கப்பட்டது.
குவைத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானி உடனடியாக கண்டுபிடித்து குவைத் விமான நிலையத்திலேயே தரையிறக்கம் செய்ததால் விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு 154 பயணிகள் உட்பட 162 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
The post சென்னைக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; குவைத்தில் தரையிறக்கப்பட்டதால் 154 பயணிகள் உட்பட 162 பேர் உயிர்தப்பினர் appeared first on Dinakaran.