– மு.மதிவாணன், அரூர்.
இறைவனை வழிபட கால நேரம் ஏது? பௌர்ணமி அன்று மட்டும்தான் கிரிவலம் செய்ய வேண்டும் என்ற விதி ஏதும் கிடையாது. தினமும் கிரிவலம் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளோரும் இருக்கிறார்கள். மலைப்பாதை ழுமுவதும் இருள் சூழ்ந்திருந்த அந்த நாட்களில் பௌர்ணமி அன்று நிலவின் ஒளி துணையிருப்பதால் பௌர்ணமி நாளை கிரிவலம் வருவதற்கு உகந்த நாளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். பௌர்ணமி நாளில் நிலவின் ஒளி மலையின் மீது வளர்ந்துள்ள மூலிகைச் செடிகளின் மீது விழுந்து எதிரொளிக்கும் கதிர்வீச்சானது காற்றில் கலந்து நாம் அதனை சுவாசிக்கும்போது நமது உடல் ஆரோக்யம் பெறுகிறது என்று சொல்வோரும் உண்டு. ஆனால், அனுதினமும் மூலிகைச் செடிகளின் வாசம் காற்றின் வழியே மலையைச் சுற்றிலும் பரவிக் கொண்டுதான் இருக்கிறது. சித்தபுருஷர்களால் அருணாச்சலம் என்று அழைக்கப்படுகின்ற திரு அண்ணாமலை சிவஸ்வரூபமாகவே பார்க்கப்படுகிறது. சாக்ஷாத் சிவபெருமானின் அம்சமாக விளங்கும் அந்த மலையை கிரிவலம் வருவதற்கு காலநேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. சந்திரனைத் தன் தலையில் சூடியிருக்கும் அந்த பிறைசூடனை பௌர்ணமி நாளில் வழிபாடு செய்வது என்பதை சிறப்பு வழிபாடாக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். அதற்காக பௌர்ணமியில் மட்டும்தான் கிரிவலம் செய்ய வேண்டும் என்ற விதி ஏதும் கிடையாது. நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையை நினைத்தவுடன் கிரிவலம் வருவது என்பதே சாலச்சிறந்தது.
?நான் பூஜை செய்யும் கோயிலில் உள்ள சுவாமி சிலையின் திருமேனியில் அழுக்கு படிகிறது. இதனை எவ்வாறு போக்குவது என்று தெரியவில்லை. அழுக்கு நீங்க என்ன செய்ய வேண்டும்?
– திருத்தணி வாசகர்.
அரிசிமாவை நன்கு புளித்த தயிரில் ஊறவைத்து அதனை சுவாமி சிலைகளின் மீது காப்புபோல நன்றாக அப்பிவிட வேண்டும். சில மணி நேரங்கள் கழித்து அந்த மாவு காய்ந்து ஏடு, ஏடாக பிரிந்து வரும்போது சிலைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்கும் சேர்ந்து வெளிவரும். அதன்பின்பு மாவுக்காப்பினைக் களைந்துவிட்டு தேங்காய் நாரால் நன்றாகத் தேய்த்தால் சிலைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்கு காணாமல் போகும். கத்தி அல்லது இரும்புத்தகடு ஆகியவற்றை உபயோகிக்கக் கூடாது.
?விநாயகர் சிலையை மற்றோர் இடத்தில் இருந்து திருடிக்கொண்டுவந்து பிரதிஷ்டை செய்தால் மிகவும் அதிர்ஷ்டமாகவும், செல்வங்கள் நிறையும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறதே, இது
உண்மையா?
– பொன்.மாயாண்டி, ராயபுரம்.
இது முற்றிலும் தவறான கருத்து. சிற்ப சாஸ்திரத்தின்படி முறையாக வடிக்கப்பட்ட சிலையாகவும், ஆகமம் அல்லது வைதீகம் என்று எந்த முறையில் பிரதிஷ்டை செய்கிறார்களோ, அந்த முறையில் தினந்தோறும் தவறாமல் நடத்தப்படும் பூஜைகளாலும்தான் அந்தச் சிலை சாந்நித்யம் பெறும். சாந்நித்யம் உள்ள சிலைகளுக்கு தனி சக்தி உண்டு. தெய்வ சாந்நித்யமும், நமது நம்பிக்கையும்தான் பலன்களைத் தருமே அன்றி வெளியில் இருந்து சிலைகளைத் திருடிக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்வதால் எந்தவித பயனும் இல்லை. சமீபத்தில் ஒரு நடன நடிகர் நடித்த திரைப்படத்தில் நகைச்சுவைக்காக இதுபோன்ற ஒரு சம்பவத்தை காட்சிப்படுத்தி இருப்பார்கள். உச்சபட்சமாக இந்தச் சிலையை திருடிக் கொண்டு வந்தவர்கள் என்று திருடர்களின் பெயர்களை கல்வெட்டாக ஆலய வளாகத்தில் பதித்திருப்பதையும் காண்பிப்பார்கள். நகைச்சுவைக்காகத்தான் என்றாலும் இது ஒரு தவறான நடை
முறைக்கு வழிவகுக்கும். விநாயகர் சிலையை மற்றோர் இடத்தில் இருந்து திருடிக் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்தால் மிகவும் அதிர்ஷ்டமாகவும், செல்வங்கள் நிறைந்திருக்கும் என்றும் சொல்லப்படுகின்ற கருத்து முற்றிலும் மூடநம்பிக்கையே. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
?குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துவதன் ஐதீகம் என்ன?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ஆண்டவனின் சொத்தை நமது சொத்தாக அங்கீகரித்துக் கொள்ளும் நிகழ்வு அது. ஒன்றாவது வயதுவரை அந்தக் குழந்தை இறைவனின் சொத்து. ஒரு வயதிற்கு உட்பட்ட கைக்குழந்தைகள் உறங்கும்போது சிரிப்பதைக் காணலாம். அவர்களது கனவில் கடவுள் வந்து விளையாட்டு காட்டுவதாக வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள். ஒரு வயதுவரை அந்தக் குழந்தைக்கு இந்த உலக வாழ்க்கை பற்றி ஏதும் தெரியாது. எந்த ஒரு பொருளின் மீதும் பற்று இருக்காது. அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள். ஒரு வயது முடிந்து இரண்டாம் வயதைத் துவக்கும் குழந்தைக்கு மெள்ள, மெள்ள ஆசை தலை தூக்குகிறது. இது என் பொம்மை, இந்த பந்து எனக்கு வேண்டும் என்று கொஞ்சம், கொஞ்சமாக நான், எனது என்று சுயநலமாக சிந்திக்கத் தொடங்குகிறது. பற்றற்ற நிலை காணாமல் போகிறது. தெய்வத்தன்மை குறையத் தொடங்கி மனிதனுக்கு உரிய குணங்கள் வளர ஆரம்பிக்கின்றன.
ஆசைகளை முற்றிலுமாகத் துறந்து ஒரு மனிதனால் வாழ இயலாது என்றாலும் அவனது ஆசைக்கு ஒரு அளவு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும், அழகு என்பது முக்கியமல்ல, ஆண்டவனின் அருள்தான் முக்கியம் என்பதை உணர்த்துவதற்காகவும் குலதெய்வ ஆலயத்திற்குச் சென்று அழகு தரக்கூடிய முடியைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். இறைவன் கொடுத்த மதிப்பிட முடியாத இந்தச் சொத்தினை மனிதர்களாகிய நாங்கள் அனுபவிக்க இருக்கிறோம் என்ற அடையாளத்திற்காகவும் அந்தக் குழந்தையின் உடம்பில் விபத்து, நோய் முதலான காரணங்களால் எந்தவித பின்னமும் உண்டாகக் கூடாது, அதற்காக நாங்களே ஒரு பின்னத்தை உண்டாக்கி நீ கொடுத்திருக்கும் சொத்தினைப் பெற்றுக் கொள்கிறோம் என்று ஆண்டவனிடம் விண்ணப்பிக்கும் விதமாக அந்தக் குழந்தைக்குக் காது குத்துகிறார்கள். ‘தான்’ என்ற அகங்காரம் அந்தக் குழந்தைக்கு எந்த வயதிலும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஒருவயது முடியும் தறுவாயில் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துகிறார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
?‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ என்று கூறுவதன் விளக்கம் என்ன?
– அயன்புரம்.த.சத்தியநாராயணன்.
தனது வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்வதற்காக ஒரு உயிரினத்தைக் கொன்றால், பாவம் இல்லை. மீனைக் கொல்பவர், அதனைத் தனக்கு உணவாக்கிக் கொள்கிறார். ஆடு, கோழி முதலான உயிரினங்களும் மனிதனின் உணவிற்காக கொல்லப்படுகின்றன. இவ்வாறு உணவிற்காக உயிரினங்கள் கொல்லப்படும் போது, பாவம் வந்து சேராது. ஆனால், ஆடம்பர வாழ்விற்காகவும், ஆடம்பர பொருட்களை தயார் செய்வதற்காகவும், வீண் பெருமைக்காகவும் உயிரினங்கள் கொல்லப்பட்டால், அது பாவச்செயலாகும். பசியை போக்கிக்கொள்ள ஒருவர் ஒரு உயிரினத்தைக் கொல்வதால் பாவம் இல்லை என்பதை விளக்குவதே ‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ என்ற பழமொழி.
The post திருவண்ணாமலை கிரிவலத்தை பௌர்ணமி அன்று மட்டும்தான் மேற்கொள்ள வேண்டுமா? appeared first on Dinakaran.