×

செய்யூர் வட்டம் சூனாம்பேட்டில் அரசு மாணவர் விடுதியில் தேங்கியுள்ள மழைநீர்: தொற்று நோய் பரவும் என அச்சம்

 

செய்யூர்: சூனாம்பேட்டில் உள்ள அரசு மாணவர் விடுதி வளாகத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மாணவர்களுக்கு தொற்று நோய்கள் பரவும் நிலை உருவாகியுள்ளது. இதனால், மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் சூனாம்பேடு ஊராட்சி இல்லீடு பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் அருகே அரசு மாணவர் விடுதி அமைந்துள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த விடுதியில் சூனாம்பேடு ஊராட்சி அரசு பள்ளிகளில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி உள்ளனர். பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த விடுதி சுற்றி நான்கு புறமும் சுற்றுச் சுவர் எழுப்பட்டுள்ளது.

இந்த விடுதி வளாக பகுதி தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதாலும் விடுதியின் பின்னால் ஏரி அமைந்துள்ளதாலும் ஆண்டுதோறும் சிறு மழை பெய்தாலும் வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து வெளியேற வழியின்றி தேங்கி விடுகிறது. இதனால், இங்கு கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளதோடு இங்கு தங்கும் மாணவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது. மேலும், தேங்கியுள்ள மழைநீரில் விஷ ஜந்துக்கள் அவ்வப்போது விடுதிக்குள் உலா வருகின்றனர்.

இதனால், மாணவர்கள் வளாகத்தில் நடமாட தயக்கம் காட்டி வருகின்றனர். தாழ்வாக உள்ள இந்த விடுதி வளாகத்தில் மண் நிரப்பி நிலத்தின் உயரத்தை அதிகரித்து தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

தற்போது, பென்சல் புயல் காரணமாக இப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால், விடுதி பின்புறம் உள்ள ஏரி நிரம்பியதோடு விடுதி நுழைவு மற்றும் விடுதி வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், மாணவர்கள் விடுதிக்குள் சென்று வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் பாதுகாப்பு நலன்கருதி இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post செய்யூர் வட்டம் சூனாம்பேட்டில் அரசு மாணவர் விடுதியில் தேங்கியுள்ள மழைநீர்: தொற்று நோய் பரவும் என அச்சம் appeared first on Dinakaran.

Tags : Jaipur Circle ,Soonampet ,Jaipur ,Chengalpattu District, ,Soonambed Orati Residence Area ,Student ,Hostel ,Dinakaran ,
× RELATED சூனாம்பேட்டில் தாழ்வான பகுதிகளில்...