பொறுப்புணர்வு குறைந்து வருகிறதா?

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்

சார்புநிலை ஆளுமைக் குறைபாடு ஓர் அலசல்

அகமெனும் அட்சயப் பாத்திரம்

இன்று சர்வதேச மனிதவள மேம்பாடு (International human resource development ) என்ற துறையியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.உளவியலானது நிர்வாகவியலுக்குப் பலவகைகளில் உதவுகிறது. மனிதர்களை பொறுப்புமிக்க A பிரிவினர் என்றும் பொறுப்பற்றவர்களை B பிரிவினர் என்றும் பிரித்துச் சொல்கிறது. உலகம் முழுவதும் பணியிடங்களில் இவ்விரு பிரிவினரின் மாறுபட்ட தன்மைகளினால் குழப்பங்களும், பிரச்னைகளும் வளர்ந்துகொண்டே போகின்றன என்றும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இவற்றிற்கெல்லாம் வித்திட்டுள்ள நம் முன்னோர்களின் செயலாற்றலை உணர்தல் வேண்டும்.

மனிதாபிமானத்தோடு பொறுப்பின்மைக் கோளாறுகளை அலசும்போது, பின்னணியில் அதீத மனக்கவலை (Depression ), குழந்தைப் பருவத்து ஆறாக் காயங்கள் (Childhood Trumas ) அறியப்படுகின்றன. எனவே சோம்பேறித்தனமாகவும், மந்தமாக இருக்கும் சார்புநிலை ஆளுமைக் குறைபாடு கனிவோடு அணுக வேண்டும்.இது இதர தீவிர மனநோய்களைப் போல சமூகத்திற்குத் தீமை (Anti -Social ) இழைக்கக் கூடியதல்ல. ஆனால் மேம்படுத்திக் கொள்ளுதல் வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.

எந்த விதமான இலக்குகளுமின்றி, இப்படி அசையாமல் இருப்பவர்களை பழங்காலத்தில் ‘எருமை மாட்டின் மேல் மழை பெய்ததுபோல் இருக்கிறாய்’ என்பார்கள். அதையே இன்று Submissive, Passive dependant என்று நவீன உளவியல் கூறுகிறது.அதாவது, தன்னைத் தாழ்நிலையிலேயே வைத்துக்கொண்டு அது குறித்த புகாரும் இல்லாமல் செயலற்று இருக்கவே விரும்பும் நிலை. உளவியலோ எந்தத் தத்துவியலோ மனிதர்களை நூறு சதவீதம் சீராக (Perfectionist) இருக்க வேண்டும் என்று வரையறுப்பதும் இல்லை. அதை நோக்கிச் செல்ல வலியுறுத்துவதுமில்லை.

ஆனால், பொறுப்புகளையும்,உரிமைகளையும் பகிர்ந்தளித்து ஒப்படைத்து ( Delegation of authority & Responsibility ) எல்லோருமாக முன்வந்து செயல்களைச் செய்வது சூழலை எவ்வளவு அழகாக மாற்றும் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதுவே உறவுகளோடும் உலகத்தோடும் நல்லிணக்கமாக (Well -bonding )உதவும். பெரிய இலக்குகளை அடையும் வெற்றியின் ரகசியமும் அதுவே. இந்தக் காலத்தில்தான் இப்படியா என்று கேட்டால் எல்லாக் காலத்திலும் பொறுப்பின்மை இருக்கத்தான் செய்கிறது என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அன்று கட்டுப்பாடுகள் கூடுதலாக இருந்தன.

இதை இவர்கள் இப்படிச் செய்ய வேண்டும் என்ற வரையறை இருந்தது. பெற்றோர்கள், பெரியவர்கள் சொன்னால் கேட்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அந்நிலை முற்றிலும் மாறி, தற்போது நிறைய சுதந்திரமும், தனித்துவமும் கிளர்ந்து எழுந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக புதிய எண்ணங்கள், மாற்றுக் கருத்துக்கள் உருவாகின்றன. எனவே, வாக்குவாதங்களும், முரண்பாடுகளும், கலகங்களும் பிறக்கின்றன.

மாற்றம் ஒன்றே மாறாதுதான்.மாற்றம் அவசியமே என்பதை மறுக்கவே முடியாது.ஆனால், எவ்வளவு மாற வேண்டும்,எதில் மாறவேண்டும் என்ற பார்வை நபருக்கு நபர் மாறுபடுகிறது. ஆனால், உணவு உண்டால் கைகழுவ வேண்டும் போன்ற அனிச்சையாக கட்டாயமாக செய்தே ஆக வேண்டிய அடிப்படைக் கடமைகளிருந்து நழுவ உரிமை தனி நபர் சுதந்திரம் போன்றவற்றைச் சாதகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

இந்தியன் (1) திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். ‘‘வெளி நாடுகளில் லஞ்சம் இல்லையா” என்ற கேள்விக்குப் பதிலாக ” இருக்கிறது.. ஆனால் அங்கே கடமையை செய்யாமல் மீறத்தான் லஞ்சம்.இங்கே கடமையைச் செய்யவே லஞ்சம். உண்மைதானே. ‘‘பாப்பா வீட்டுப்பாடம் முடித்தால் மிட்டாய் தருகிறேன்” ‘‘நீ நன்றாக சமைத்தால்தான் நான் செலவுக்கு பணம் தருவேன்” நீங்கள் வைர நெக்லெஸ் வாங்கி தந்தால்தான் உங்களுடைய அக்கா மகள் திருமணத்திற்கு வருவேன்” இப்படி எவ்வளவு தட்டிக் கழிக்கும் மனோபாவங்கள் நமக்குள் பெருகி விட்டன? வீட்டிலிருந்துதான் ஒவ்வொரு பொறுப்பின்மை குறைபாட்டையும் நமக்கே தெரியாமல் எல்லோரும் வளர்க்கிறோம். எனவே மாற்றங்களை அங்கிருந்தே தொடங்க வேண்டும்.

பொறுப்பற்றவர்களை கேலி செய்து அவர்கள் அப்படி என்று முத்திரை குத்தி தன்னைச் சார்ந்தே அடிமைபோல் இருக்கட்டுமே என்று சுயநலமாக சிலர் விட்டுவிடுவார்கள். இது தவறு. எல்லா ஆளுமைப் பண்புகளிலும் நிறைகளும் குறைகளும் இருக்கின்றன. சில அடுத்தவர்களை அதிகமாக பாதிக்கும். மிகவும் குறைவான பாதிப்புகளையே கொடுக்கக்கூடிய சார்பு நிலைப் பண்பாளர்கள் (Dependent Personality ) நீர்மை நிறைந்த களிமண்ணைப் போன்றவர்கள். மனது வைத்தால் அவர்களைச் சிலையாக வடிவமைக்கலாம்.

‘‘ ஒன்றுமே செய்யாமல் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டு இருக்கும் உனக்கே இவ்வளவு கோபம் வருகிறதே.. அத்தனைப் பிரச்சனைகளையும் சமாளிக்கும் உன் அப்பாவிற்கு எவ்வளவு கோபம் வரும். அந்தக் கோபத்தில் இரண்டு அடி அடித்தால் என்ன?” 7G ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தில் சராமரியாக நாயகி, நாயகனிடம் இப்படிக் கேட்பார். இது போன்ற பொறுப்புணர்வை ஆழமாக உணர்த்தும் படைப்புகள் அரிதாகிவிட்டன. எல்லாவற்றிலும் அலட்சியமாக இருப்பது பெரியவர்களை மதிக்காமல் இருப்பது எல்லாம் சகஜமென பலரும் எண்ணுகிறார்கள்.கொலை/ கொள்ளை/கற்பழிப்பு மட்டுமே தவறு மற்றவை எல்லாம் சரியே என்ற அபாய மனநிலைக்கு போகும்முன் நாமே முன்வந்து நடைமுறை வாழ்வை பொறுப்புணர்வோடு கட்டமைத்துக் கொள்ளுதல் நலம்.

குழந்தை வளர்ப்பில், நாம் பட்டது போல் கஷ்டம் படக்கூடாது என்பதே அடிப்படைத் தவறு. நாம் கஷ்டப்படவில்லை. சுக தூக்கங்களை சமமாக எடுத்துக் கொண்டு பொறுப்புடன் வளர்க்கப்பட்டோம் என்று முதலில் பெற்றோர் உணர வேண்டும். குழந்தைகளை அதிகமான வசதிகள் கொடுத்து பொறுப்பின்மையை ஊக்குவிக்கிறோம். இந்நிலையை மாற்றி, நம் வாழ்க்கை நம் உலகம் என்ற புரிதலோடு எல்லோரும் அவரவர் பணிகளை தாமச் செய்யத் துவங்க வேண்டும். அடுத்தவருக்காக யாரும் வாழ வேண்டாம். ஆனால் அடுத்தவர்களோடுதான் உலகில் வாழ வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டாலே பாதி பிரச்சனைகள் தீர்த்து விடும்.

‘‘என்ன இரண்டு மணி நேரமா மொபைல் போனையே பார்த்துட்டு இருக்க” என்று குழந்தைகளைத் திட்டிவிட்டு இந்தப் பக்கம் வந்து நீங்கள் நான்கு மணி நேரம் ஃபோனையே பார்த்து கொண்டிருந்தால் அவர்களுக்குள் ‘ நான் மட்டும் ஏன் படிக்க வேண்டும்’ என்ற கேள்வி பிறக்கும். அவர்கள் கண்முன் நீங்களும் வேறு ஆக்கபூர்வமான செயல்களைச் செய்யுங்கள். சொல்வதை விடவும் செயல்களை மிக கவனித்து அப்படியே பின்பற்றுவார்கள் என்பதே குழந்தைகளின் உளவியல். நீங்கள் உங்கள் உரிய கடமைகளை உரிய நேரத்தில் செய்யுங்கள். அப்போது உங்களின் பொறுப்புணர்வு நிச்சயம் அவர்களுக்குள் வரும் என்று நம்புங்கள்.

‘‘இல்லை என்று சொல்வது ஒரு கலை ‘என்போம். நாம் பிறருக்கு No சொல்வதற்கு முன் தனக்குத்தானே No சொல்லப் பழக வேண்டும். அதாவது சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு என வரையறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வளவுதான் சாப்பிட வேண்டும், சாப்பிட்ட தட்டை எல்லோரும் கழுவி வைக்க வேண்டும், துணிகளை எடுத்து பீரோவில் அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும், இவ்வளவு நேரம் முழித்திருக்கக்கூடாது,இத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும், இதெல்லாம் என்னுடைய வேலை ஒரு வடிவமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம். அப்போது மெல்ல மெல்ல மாற்றங்கள் தெரியும். நேர மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கடமையை நோக்கி நகர்தல் தானாக அப்போது நிகழும். சிறு சிறு பொறுப்பின்மை அடுத்தவரை எனப் புரிந்து கொண்டாலே தன் வேலையில் தொடர் செயலூக்கம் (Consistancy ) வந்து விடும்.

வீடுகளில்தான் இப்படி என்று பொதுவெளியை எட்டிப் பார்த்தால், அங்கும் பொறுப்பின்மையே தாண்டவம் ஆடுகின்றது. முறையான வரிசையில் நிற்க வேண்டும் (Que ) என்ற அடிப்படைவிதியைக் கூட பலரும் கடைபிடிப்பதில்லை. தரமான பொருட்களைத் தயாரிக்க வேண்டும் விற்பனை எனது பணி என வணிகர் நினைக்க வேண்டும். ஆனால் மூன்று நபர்கள் கடையில் சேர்ந்தாலே கடைக்காரர் எரிந்து விழுகிறார்.

நல்ல திரைப்படத்தைக் கொடுக்க வேண்டும் என இயக்குனர் எண்ண வேண்டும். என் விருப்பம் எப்படி வேண்டுமானாலும் படைப்பேன் என்ற எண்ணம் இருப்பின் பணவிரயமும் தோல்வியுமே மிஞ்சும். தன் வாகனத்தில் ஏறும் நபர்களை கனிவாக நடத்தி, பத்திரமாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கும் சமூகப்பொறுப்பு உணர்வு நிச்சயம் இருக்க வேண்டும். ஆனால் இன்று ஓர் அவசரத்திற்கு ஆட்டோ புக் செய்தால்கூட நேர்காணல் போல ஆயிரம் கேள்வி கேட்கிறார்கள். இவை சில உதாரணங்களே.

தான் ஒப்புக் கொண்டு ஏற்ற பணியைச் யாருக்கும் செய்ய விருப்பமில்லை.வெறுமனே வீட்டில் அமர்ந்து கொண்டு யாராவது பணம் கொடுத்தால் பரவாயில்லை எனும் அளவிற்கு மனிதர்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கும் மனநிலைக்கு மாறிவிட்டார்கள். இது மனித உழைப்பின் பெரிய வீழ்ச்சிக் காலம் என்றே சொல்லப்படுகிறது. அனைவருமே தான் சார்ந்த சமூகத்தையொட்டியும் சில பொறுப்புகளை எடுத்துக்கொள்வது மிக அவசியம். அப்போதுதான் தொய்வின்றி இயங்க முடியும்.

முன்னேற்றம் சாத்தியமாகும்.மேலும், அடுத்தவரை நோக்கி விரல்நீட்டும் முன் நாம் யார் ‘நமது பொறுப்புகள் எவை’ அவற்றைச் சரியாகச் செய்கிறோமா என நேர்மையாக சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.மேலும், உதவி தேவைப்படுமாயின் உளவியல் துறைசார்பில் பயிற்றுநர்களை நாடலாம். CBT (Cognetive Behavioural Therapy ) எனும் அறிவாற்றலுடன் கூடிய எளிமையான நடத்தைப் பயிற்சி நற்பலன்களைத் தரும் பல் துலக்குவதை ஓவியம் தீட்டுவது போல்.. எதைச் செய்தாலும் அர்ப்பணிப்போடு செய்’ என்று எழுத்தாளர் பாலகுமாரன் சொல்வார்.

பொறுப்புகளை எடுத்துக் கொள்வதே மகிழ்ச்சி.அதுதான் உயிர்ப்புடன் கூடிய நிறைவான வாழ்தல் என்பதையே பலர் மறந்து விட்டார்கள்.ஓடிக்கொண்டிருந்தால்தான் ஓடை
நதி என்று சொல்வார்கள். நகர்வும், இயக்கமும் இருந்தால் மட்டுமே கடலில் கலக்க முடியும். பிறகு, அதே நீர் மேகமாகி வானத்தைக் கூட தொட முடியும். ஆனால் ஓரிடத்திலேயே தங்கிவிட்டால் குட்டை என்றுதான் சொல்வார்கள். அதில் சேறும், சகதியும், புழுதியும் கிருமியும் கூடவே வாய்ப்பு அதிகம். அவை நம் வாழ்வை அடையாளமின்றிப் புதைத்துவிடும்.

எனவே,வாழ்தலின்- உயிர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடிய பொறுப்புகளைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.நடைமுறையின் அடிப்படைக் கடமைகளைச் செய்வதோடு, சமூகத்திற்கும் பயனுள்ள செயல்களை முன்னெடுத்துச் செய்வதுமே மேம்பட்ட சுய அடையாளம் என்றுணர்ந்து கைகோர்த்துப் பயணிப்போம்.

The post பொறுப்புணர்வு குறைந்து வருகிறதா? appeared first on Dinakaran.

Related Stories: