×

பாலின பேதங்கள் ஒரு பார்வை பாலின பேதங்களின் தாக்கங்கள்

நன்றி குங்குமம் தோழி

எத்தனையோ பெண்கள் எத்தனையெத்தனையோ சாதனைகளைப் புரிந்து பெண்கள் எவ்விதத்திலும் ஆண்களுக்கு குறைந்தவர்கள் இல்லை என்று தினம் தினம் புரிய வைத்துக்கொண்டிருந்தாலும், ஆண்டாண்டு காலமாக மனதின் ஆழத்தில் புகுந்துவிட்ட சில அச்சங்கள், சில பழக்கவழக்கங்கள், இன்னும் பெருவாரியான பெண்களின் வாழ்வில் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டேதான் இருக்கின்றன. ஒவ்வொரு ஆணும் இதைப் புரிந்து பெண்ணின் முன்னேற்றத்திற்கு ஆதரவு அளிக்கிறார்களோ இல்லையோ, முதலில் ஒவ்வொரு பெண்ணும் இந்தத் தாக்கங்களிலிருந்து வெளிவர வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்படத் தொடங்கினாலே இன்னும் சில வருடங்களிலாவது நாம் அனைவரும் சமநிலை அடைவோம்.

இன்றும், இக்காலத்திலும், படித்து ஓரளவிற்கு முன்னேறிவிட்ட சில குடும்பங்களில் கூட ஒரு குழந்தை பெண்ணாக பிறந்துவிட்டால், ஏமாற்றம் அடைகிறார்கள். ஆணாக பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறார்கள். இங்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளும் ஆணாகவே பிறந்து கொண்டிருந்தால், இன விருத்தி எங்கிருந்து நடக்கும்? பெண்களே இப்படி ஆசைப்படுவது ஏன்? ஏனெனில் இன்னும் பெண் குழந்தைகளை வளர்ப்பதும் ஆளாக்குவதும் நம் சமூகத்தில் ஒரு சுமையாகவே கருதப்படுவதுதான். எப்படி ஓர் ஆண் குழந்தையின் வளர்ப்பு சுமையற்றதாகவும் ஒரு பெண் குழந்தையின் வளர்ப்பு சுமையுள்ளதாகவும் ஆகிறது? என்னதான் முன்பு போலில்லாமல், பெண் குழந்தைகளையும் படிக்க வைத்தாலும் வேலைக்கு அனுப்பினாலும், இந்த இரண்டைத்தவிர இன்னும் பல இலக்கணங்களின் அழுத்தம் தான் இப்படி நினைக்க வைக்கிறது.

அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு என்ற வசனம் நீக்கப்பட்டு, அந்த இடத்தில் என்னதான் படிச்சாலும், வேலைக்கு போனாலும், இன்னொருத்தன் கையில பிடிச்சு கொடுக்குற வரைக்கும் அவள பத்திரமா பாத்துக்கணும் இல்ல? என்ற வசனம் வந்து அமர்ந்திருக்கிறது. ஏன் அவளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்? ஏன் அவனை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டாமா? என்றால், ஆமாம்.

அவளைத்தான் பார்த்துக்கொள்ள வேண்டும், ஏனெனில், அவளுக்குத்தான் இன்னும் கற்பு என்ற கடிவாளம் தேவைப்படுகிறது. அவள் விருப்பப்பட்டு ஒரு ஆணுடன் பழகினாலும் அவள் குடும்பத்தின் மானம் போய்விடும், அவளை யாராவது “பார்த்து வளர்க்க வேண்டியில்லாத பிறவி” எடுத்திருக்கும் ஓர் ஆண் வன்புணர்வு செய்துவிட்டாலும் அவள் மானமும் குடும்ப மானமும் போய்விடும். அவளை நம்பியும் இருக்க இயலாது, அப்படியே அவளை நம்பினாலும் “ஆண் பிள்ள, அவன் பாட்டுக்கு வளர்ந்துடுவான், அவன பத்தி என்ன கவலைப்பட வேண்டியிருக்கு?” என்றபடிக்கு வளரும் சில ஆண்கள் நடமாடும் பொதுவெளியில் அவர்களை நம்பி எப்படி வளர்ப்பது?

பெண்கள் பாதுகாப்பாக வளர்க்கப்பட வேண்டியவர்கள், நல்ல பெண் என்று திருமணத்திற்கு முன்னும், நல்ல மனைவி, மருமகள் என்று திருமணத்திற்கு பின்னும் பெயர் எடுக்க வேண்டிய பொறுப்பு அவளுக்கு உள்ளது. வெளியில் நடமாடும் சில “தானாக வளர்ந்த” ஆண்களால் தன் மகளுக்கு ஆபத்து வரலாம் என அச்சப்படும் பெற்றோர்கள் கூட தனக்கு ஒரு மகன் இருந்தால், அவனும் வளர்க்கப்பட வேண்டும், பெண்கள் மதிக்கப்பட வேண்டும் அவனால் என நினைத்துப் பார்ப்பதே இல்லை.

ஆண்கள் சரியாக வளர்க்கப்படாததினால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது என்ற அடிப்படை உண்மை கூட புரிவதில்லை. நம் கவனங்கள் பெண் குழந்தைகளிடம் மட்டுமில்லாமல், ஆண் குழந்தைகளை வளர்ப்பதிலும் இருந்தால், இங்கு யாரும் யாருக்கும் பாதுகாப்பு அளிக்கத் தேவையே இல்லை.

அடுத்த பிரச்னை. பெண்கள் திருமணத்திற்கான, அதற்கு பிறகான சீர் செனத்துக்கான செலவுகளும் பெற்றோர்களை அச்சுறுத்துகின்றன. பெண் குழந்தைகளை பெறுவதில் உள்ள அச்சம் முழுவதும் நீங்க வேண்டுமானால் இங்கு நாம் தனி மனிதர்களாகவும், சமூகமாகவும் மாற்றம் கொண்டுவர வேண்டியவை இன்னும் ஏராளம் ஏராளம் விஷயங்கள் உள்ளன. வழிவழியாக இதுதான் எங்கூரு பழக்கம், இதுதான் எங்க சாதி வழக்கம்னு சொல்லிக்கொண்டே என்றோ யாரோ ஏற்படுத்திய பழக்கவழக்கங்களை களையாமல் கண்மூடித்தனமாக பின்பற்றிக் கொண்டிருக்கும் வரை, பெண் குழந்தைகள் ஒரு சுமையாகத்தான் பெற்றோர்களாலேயே பார்க்கப்படுவார்கள்.

பெண்களுக்கு படிப்பும் கொடுத்து, சொத்துரிமைகளையும் கொடுத்துவிட்ட இந்தக் காலத்திலும், ஏன் திருமணங்கள் பெண்வீட்டாருக்கு மட்டும் அத்தனை செலவுகளை ஏற்படுத்துகின்றன? பணம் கொட்டிக்கிடப்பவர்களாகவே இருந்தாலும், திருமணம் என்பது அதில் இணையும் இருவருக்கும் பொதுதானே? அப்படியிருக்க செலவுகள் ஏன் ஒருபக்க சுமையாக இருத்தல் வேண்டும்? இதில் மாற்றம் வரவேண்டாமா?

அண்ணன்களுக்கும் தம்பிகளுக்கும் இணையாக ஒரு பெண்ணை அவள் பெற்றோர்கள் படிக்க வைத்திருந்தால், அந்தப் பெண் முடிவெடுக்க வேண்டாமா? தன் திருமணத்திற்கான செலவை தன் பெற்றோர்களோ இல்லை உடன்பிறந்தவர்களோ தேவையின்றி சுமக்கக்கூடாது என..? அப்படி ஒரு பெண்ணிற்கு தோன்றவில்லையெனில் அவளை எது அப்படி நினைக்க விடாமல், எல்லாம் தனக்கு செய்து அனுப்ப வேண்டும் என நினைக்க வைக்கிறது?

நாம் பேசும் பெண்ணியத்திலும், பெண் சுதந்திரத்திலும் நியாயங்களை எங்கோ தவற விடுகிறோம். நம் வாழ்விற்கான சுதந்திரம் நம் கையில் இருக்க வேண்டுமெனில், நம் வாழ்விற்கான எல்லா பொறுப்புகளையும் நாம்தான் சுமக்க வேண்டும். நம் பெற்றோர்களோ, உடன்பிறந்த அண்ணன், தம்பிகளோ அல்ல. படித்து பெரிய பெரிய பதவியில் இருக்கும் பெண்கள் கூட தன் முதல் பிரசவம் பெற்றோரால் பார்க்கப்பட வேண்டும், தனக்கு பிறக்கும் பிள்ளைக்கும் அவர்கள் சீர் செய்ய வேண்டும், ஒவ்வொரு பண்டிகைக்கும் அம்மா வீட்டிலிருந்து சீர் வந்தால்தான் தனக்கு பெருமை என நினைப்பதெல்லாம் வேடிக்கையான செயல்கள்.

பெண்கள் இப்படி வளர்க்கப்படும் வரை/ வளரும் வரை கண்டிப்பாக பெற்றோர்கள் பெண் குழந்தைகளை சுமையாகத்தான் பார்ப்பார்கள். சற்று யோசித்தோமானால், இவையெல்லாம் நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் அழுத்தங்கள். இப்படிப்பட்ட பெண்களால் அவர்கள் வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு எத்தனை அழுத்தங்கள் என்று நாம் என்றாவது சிந்திக்கிறோமா? ஆணாகப் பிறந்துவிட்டால், வீட்டில் இருக்கும் அத்தனை பெண்களின் தேவைகளையும் அவன் பூர்த்தி செய்ய வேண்டும். அப்பாவால் முடிந்தால் அப்பா, இல்லை அண்ணன், தம்பிகள் செய்ய வேண்டும். அவனுக்கும் திருமணமாகி அவனுக்கென ஒரு குடும்பம் சுமை என்றெல்லாம் வந்துவிட்ட பிறகும் அவன் உடன்பிறந்தவளுக்கு வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டும்.

எதுவும் யாரும் யாருக்கு வேண்டுமானால் செய்யலாம். அதில் தவறொன்றும் இல்லை. ஆனால் அது அன்பினால் இருக்க வேண்டும். அவரவர் சூழல் பொறுத்து இருக்க வேண்டும். செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தினால் அல்ல. நாம் சமநிலை நோக்கித்தான் போகிறோமா என்றால் எனக்கு இல்லை என்றே தோன்றுகிறது. பிள்ளை வளர்ப்பில் தொடங்க வேண்டும் சமத்துவம், ஒவ்வொரு குடும்பத்திலும்.

பெற்றோர்கள் இருவரும் சமநிலையில் இருப்பதை பார்க்க வேண்டும் பிள்ளைகள். இருவரும் வேலைக்குச் சென்றாலும், ஒருவர் வீட்டை நிர்வகித்து இன்னொருவர் வெளியில் வேலைக்குச் சென்று வந்தாலும், இருவரின் பங்களிப்பையும் இருவரும் மதிக்க கற்றிருக்க வேண்டும். ஆண் வேலை, பெண் வேலை என்ற பாகுபாடில்லாமல், குடும்பம் நடத்துவதற்கான வேண்டிய உழைப்பை இருவரும் பங்கிட்டு செய்வதாக இருக்க வேண்டும்.

ஏன் ஓர் ஆண் பிள்ளைக்கு ஸ்பைடர் மேன் பொம்மையும், கார் பொம்மையும் வாங்க வேண்டும்? பெண் குழந்தை என்றால் பார்பி டாலும், குக்கிங் செட்டும் வாங்க வேண்டும்? அங்கிருந்தே நாம் அவர்களின் எண்ணங்களில், செயல்களில் பாகுபாட்டை திணிக்கத் தொடங்குகிறோம். பெண் குழந்தை, ஆண் குழந்தை என்ற பாகுபாடு இல்லாமல், அவரவருக்கு பிடித்த உடையை, பொம்மையை, புத்தகங்களை வாங்கித்தர வேண்டும்.

பெண்ணை பெண் போல் வளர்க்க வேண்டாம், ஆணை ஆண் போல் வளர்க்க வேண்டாம். குழந்தைகளை குழந்தைகளாக வளரவிடுவோம். இன விருத்திக்காகவும், அந்த இனவிருத்தி தடைபடாமல் இருக்க ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்படுவதற்காக மட்டுமே சில உடற்கூறு வித்தியாசங்களோடு நாம் ஆண் எனவும் பெண் எனவும் பிரித்தறியத்தக்கவாறு பிறக்கிறோம். மற்றபடி, பிடித்தங்கள், குணங்கள், திறமைகள், உணர்வுகள் எல்லாமே ஒவ்வொரு மனிதருக்கும் பாலின பேதமின்றி தனித்தனியே.

இயற்கையுடன் ஒன்றி வளரவேண்டிய பிள்ளைகளை பல இலக்கணங்களை திணித்து இப்படி பிரித்து பிரித்து வளர்த்து, மனிதர்களுக்குள்ளான “வேற்றுமையிலும் ஒற்றுமை” கொள்ளும் இணக்கத்தை உடைத்துதான் நாம் இன்று ஒட்டுமொத்தமாக ஆண்கள் எல்லாம் அப்படித்தான் என்றும், பெண்கள் எல்லாம் இப்படித்தான் எனவும் கூட்டம் கூட்டமாக குறைகள் கூறித் திரிந்து கொண்டிருக்கிறோம். இப்படியே நம் பயணங்கள் தொடர்ந்தால், சமநிலை என்பது கானல் நீரே!

(தொடர்ந்து சிந்திப்போம்…)

தொகுப்பு: லதா

 

The post பாலின பேதங்கள் ஒரு பார்வை பாலின பேதங்களின் தாக்கங்கள் appeared first on Dinakaran.

Tags : Kungumum ,
× RELATED வலியும் மனிதர்களும்!