அரசியலமைப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு: நாடாளுமன்றம் 5வது நாளாக ஒத்திவைப்பு.! எதிர்கட்சி எம்பிக்கள் அமளியால் பரபரப்பு

புதுடெல்லி: அரசியலமைப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்கட்சி எம்பிக்கள் அமளிக்கு மத்தியில் நாடாளுமன்றம் 5வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை நடந்த 4 நாட்கள் அமர்வும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று 5வது நாள் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக மணிப்பூர், அதானி மீதான பிடிவாரன்ட், உத்தரபிரதேச மாநிலம் சம்பல் வன்முறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் சிலர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர்.

தொடர்ந்து காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில், ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டார். அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், அரசியலமைப்பு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அதனால் மக்களவை நடவடிக்கைகள் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘சபாநாயகரை ஏற்கனவே சந்தித்து பேசினோம். அவர் அவையை சுமூகமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. அரசியலமைப்பு குறித்து விவாதம் நடத்த தயாராக இருந்தால், நாங்கள் அவையை சுமூககமாக நடத்த தயாராக இருக்கிறோம்’ என்றார். அதேபோல் மக்களவையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் 12 மணிக்கு இரு அவைகளும் கூடியதும், எதிர்கட்சி எம்பிக்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால் நாளை வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

The post அரசியலமைப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு: நாடாளுமன்றம் 5வது நாளாக ஒத்திவைப்பு.! எதிர்கட்சி எம்பிக்கள் அமளியால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: