பெரம்பலூர்,டிச.2: பெஞ்சல் புயல் காரணமாக, பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் 250 ஏக்கர் மக்காச்சோளப் பயிர்கள் மண்ணில் சாய்ந்து பாதித்ததை வேளாண்மை துறை இணைஇயக்குனர் நேரில் ஆய்வு செய்தார். தமிழக அளவில் மக்காச்சோள சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகித்து வருகிறது. இங்கு மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது 90 நாள் பயிர்களாக கதிர்களுடன் அறுவடைக்குத் தயாராக இருந்தன. குறிப்பாக இன்னும் 10 அல்லது 20 நாட்களில் பெரும்பாலும் அறுவடை செய்ய இருந்தன.
இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நவம்பர் 30ஆம் தேதி காலை முதல் டிசம்பர் 1ஆம் தேதி மதியம் வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. குறிப்பாக வேப்பந்தட்டை 48 மிமீ, பெரம்பலூர், தழுதாழை ஆகியன தலா 47 மிமீ, லெப்பைக்குடிகாடு 41 மிமீ, எறையூர் 38 மிமீ, வி.களத்தூர் 37 மிமீ, செட்டிக் குளம் 34 மிமீ, பாடாலூர் 29 மிமீ, அகரம் சீகூர் 22 மிமீ, புது வேட்டக்குடி 17 மிமீ, கிருஷ்ணாபுரம் 15 மிமீ என மொத்தம் 375 மிமீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 34.09 மிமீ ஆகும்.
இந்த மழையின் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யக் கூடிய வேப்பந்தட்டை தாலுக்காவில் 160 ஏக்கர் பரப்பளவில் கதிர்கள் முற்றியிருந்த மக்காச்சோளப் பயிர்கள் மண்ணில் சாய்ந்தன. இதேபோல், பெரம்பலூர் தாலுக்காவில் 70 ஏக்கருக்கு மேலான பரப்பளவில் மக்காச்சோள பயிர்கள் மண்ணில் சாய்ந்தன. வேப்பூர், ஆலத்தூர் தாலுகாக்களில் தலா 10 ஏக்கர்கள் என மாவட்ட அளவில் 250 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் பாதித்தன. இது பற்றி தகவல் அறிந்து பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குனர் பாபு பூலாம்பாடி கடம்பூர், பூஞ்சோலை கோரையாறு, தொண்டமாந் துறை, அரும்பாவூர், விஜய புரம், அ.மேட்டூர், மலையாள பட்டி மற்றும் கை.களத்தூர் நூத்தப்பூர், நெற்குணம், பெரிய வடகரை வெண்பாவூர், கிருஷ்ணாபுரம் உள் ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார்.மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குனர் பாபு தெரிவிக்கையில், சாய்ந்துகிடக்கும் மக்காச் சோளப் பயிர்கள் பெரும் பாலும் 90 நாள் வளர்ச்சி அடைந்த பயிர்களேஆகும்.
இதனால் கதிர்களுக்குப் பாதிப்புகள் கிடையாது. வயலில் உள்ள தண்ணீர் வடிந்த பிறகோ அல்லது செடிகள் காய்ந்த பிறகோ அறுவடையைத் தொடங்கலாம். ஈரத்தில் சாய்ந்து கிடப்பதால் மெஷின் அறுவடைக்கு வழியில்லாமல் போனால் கைகளால் அறுவடை செய்துகொள்ளலாம். இவைகள் தவிர இளம் பயிர்கள் சாய்ந்திருந்தால் அவை சீக்கிரம் எழுந்து விடும். இருந்தாலும் மாவட்ட அளவில் மக்காச் சோள பயிர்கள் பாதிப்பு குறித்து வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் மூலம் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இது பற்றிய தகவல்கள், பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கும், தமிழ்நாடு வேளாண் மைத்துறை இயக்குனரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர்பாபு நடத்திய ஆய்வின்போது, வேப்பந்தட்டை வேளா ண்மை உதவி இயக்குனர் அசோகன், பூலாம்பாடி உதவி வேளாண் அலுவலர் துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post பெஞ்சல் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 250 ஏக்கர் மக்காச்சோளம் பாதிப்பு appeared first on Dinakaran.