வடகிழக்கு பருவமழை முடியும் வரை சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சர் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை முடியும் வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மடுவின்கரையில் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் 200 இடங்களிலும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களிலும் சேர்த்து 500 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடத்தப்பட்டது. கடந்த ஒன்றரை மாதம் காலத்தில் தமிழ்நாடு முழுவதிலும் நடைபெற்றுள்ள மழைக்கால சிறப்பு முகாம்களின் எண்ணிக்கை 51,707. இது மருத்துவத்துறை வரலாற்றில் மிகப் பெரிய சாதனை ஆகும். இதன் மூலம் 28,02,552 பேர் பயன்பெற்றுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை முடியும் வரை மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடைபெறும். சென்னை நீங்கலாக மழை தொடர்ந்து பெய்து வரும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 300 மருத்துவ முகாம்கள் இன்று நடத்த துறை திட்டமிட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post வடகிழக்கு பருவமழை முடியும் வரை சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: