வங்கக் கடலில் கடந்த 23ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் 26ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக மாறியது. இது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு அருகே வந்து புயலாக வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால், காற்றின் திசை மாறுபாடு காரணமாக புயலாக மாறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் 29ம் தேதி அதுபுயலாக மாறியது. அதற்கு பெஞ்சல் என்று பெயரிடப்பட்டது.
இந்நிலையில் அந்த புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது வலுவிழந்த நிலையில் கரையைக் கடக்கும் அளவுக்கு வலுக்குறையத் தொடங்கியது. இருப்பினும், 29ம் தேதி கரையைக் கடக்காமல் இரவு வரை போக்குக்காட்டியது. 30ம் தேதி பகல் முழுவதும் மெல்ல நகரத் தொடங்கிய நிலையில், பசிபி்க் கடல் பகுதியில் இருந்து வரும் கடல் நீரோட்டம் மரக்காணத்தில் மிகவும் ஆழ்ந்து காணப்பட்டதால், பெஞ்சல் புயலின் ஒரு பகுதி மட்டும் கடல் நீரோட்டத்தால் கடல் நோக்கி இழுக்கப்பட்டது. அதாவது புயலின் காலை கடல் நீரோட்டம் பிடித்து இழுத்தது. அதனால் புயல் கரையைக் கடக்க முடியாமல் புதுச்சேரி அருகே நிலை ெகாண்டது.
இந்நிலையில், தான் 30ம் தேதி இரவு 8.30 மணி முதல் 11.30 மணி அளவில் புயலின் ஒரு பகுதி மட்டும் தரைப் பகுதியை தொட்டுக் கொண்டு கரையேற முயற்சி செய்தது. ஆனால், புயலின் மறு பகுதி கடலில் இருந்து வெளியேற முடியாமல் திணறிய நிலையில் இருந்தது. இதனால் ஏற்பட்ட இழுபறியில் புயலின் மையப்பகுதி புதுச்சேரி அருகே கடலில் மையம் கொண்டது. இந்த இழுபறி 30ம் தேதி இரவு விடியவிடிய 8 மணி நேரம் நீடித்தது. இன்று காலையில், 9 மணிக்கு பிறகு இந்த இழுபறி ஒருவழியாக முடிக்கு வந்தது போல காணப்பட்டாலும், மெல்ல நகரும் தன்மை கொண்டதாக மாறியது. கடல் நீரோட்டம் புயலின் வேகத்தை குறைத்த காரணத்தால் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இது பின்னர் மாமல்லபுரம் நோக்கி நகர்வதை தவிர்த்து மரக்காணம் நோக்கி நகரத் தொடங்கியது. 30்ம் தேதி புதுச்சேரி அருகே இந்த புயல் நிலை கொண்டு இருந்த காரணத்தால், 3 இடங்களில் அதிக கனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்ச மழை என்று பார்த்தால், திண்டிவனம் அடுத்த மயிலத்தில் அதிகபட்சமாக 510 மிமீ மழை கொட்டித் தீர்த்தது. புதுச்சேரியில் 490 மிமீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதியில் அதிகபட்சமாக புதுச்சேரியில் 210 மிமீ மழைதான் பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக நேற்று முன்தினம் இரவு தான் 460மிமீ மழை கொட்டித் தீர்த்துள்ளது.
புதுச்சேரியில் வலுவிழந்து நிலையில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தரைப் பகுதி நோக்கி நேற்று மதியம் நகரத் தொடங்கியது. கடலில் ஊன்றி இருந்த புயலின் கண் பகுதியும் வலுவிழந்து தரைப் பகுதிக்கு வந்துள்ளது. நேற்று மாலை 7 மணி அளவில் அந்த கண்பகுதி செஞ்சியில் நிலை கொண்டிருந்தது.
இந்த நிகழ்வின் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் நேற்று அதிக கனமழை பெய்தது. அதனால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், வட தமிழகத்தில் நேற்று சூறாவளிக் காற்று வீசியது. விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களில் மணிக்கு 70 கிமீ வேகம் முதல் 80 கிமீ வேகத்தில் நேற்று பலத்த காற்று வீசியது.
இதையடுத்து, நேற்று இரவில் ஈரோடு மாவட்டப் பகுதிக்கு நகர்ந்து சென்று நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. அதனால் அதிகனமழை பெய்யும் என்பதால் திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
The post பெஞ்சல் புயல் வலுவிழந்தது மழை படிப்படியாக குறையும் appeared first on Dinakaran.