அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னை நிம்மதியாக உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். கொளத்தூர், செல்வி நகர் பகுதியில் மழை நீரை அகற்றுவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள 1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்படும் மழை நீரானது, நெடுஞ்சாலைத்துறையின் மழை நீர் வடிகாலில் மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இவ்விடத்தில் மழைநீர் வெளியேற்றம் செய்யப்பட்டு, இப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, சீனிவாசன் நகரில் உள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, ஆய்வு செய்து அங்குள்ள மருத்துவர்களிடம் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளை கையிருப்பில் வைத்துக்கொண்டு, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தல் நாள்தோறும் சுமார் 200 பேர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய உந்து நிலையத்தின் செயல்பாட்டினையும், 24 “ஏ” சாலையில் உள்ள குளத்தினை மேம்படுத்தும் பணிகளையும் முதல்வர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் 109 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் ஆறு தளங்களுடன், தீவிர சிகிச்சைப் பிரிவு, விபத்து காய சிகிச்சைப் பிரிவு, பிரசவ அறை, நரம்பியல் மருத்துவம், புற்றுநோயியல் கண் மருத்துவப் பிரிவுகள், இருதவியல் புறநோயாளிகள் உள்நோயாளிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, ஆஞ்சியோ அறுவை அரங்கம், இ.சி.ஜி, எக்கோ மற்றும் டிரெட்மில் சோதனை போன்ற பல்வேறு வசதிகளுடன் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 3 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையின் உள்ளேயும், வெளியேயும் மழைநீர் தேங்கவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் மின்தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர் வசதிகளையும், அவசிர சிகிச்சைக்கான மருந்துப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், இம்மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவருபவர்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் மருந்துகள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொளத்தூர் தொகுதியில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிலர் பழைய மழை காட்சிகளை மீண்டும் போட்டு தண்ணீர் தேங்கியுள்ளது என கூறுகிறார்கள். சென்னையில் வழக்கமாக மழைநீர் தேங்கும் இடங்களில் தண்ணீர் தற்போது தேங்குவது இல்லை. சென்னை தத்தளிக்கவும் இல்லை, தப்பிக்கவும் இல்லை. நிம்மதியாக உள்ளது.

மேயர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து மக்களோடு தொடர்பில் உள்ளார்கள். புயலை ஓரளவு கணிக்க முடியும். முழுவதுமாக கணிக்க முடியாது. எனவே வானிலை அறிக்கையை தவறு என கூற முடியாது. மழை வெள்ள பாதிப்புகளுக்கு ஓரளவிற்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளது. அதை மீறி அதிகப்படியான மழை வரும் போது கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவருக்கு குற்றச்சாட்டு வைப்பது வேலையாக உள்ளது. நாங்கள் எங்கள் வேலையை செய்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் நீரேற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர் பி.கணேசன், பகுதி செயலாளர்கள் ஐ.சி.எப்.முரளி, நாகராஜன், மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முதல்வருக்கு நன்றி தெரிவித்த மக்கள்
கொளத்தூர் தொகுதியில் செல்வி நகர், பெரியார்நகர், ஜி.கே.எம். காலனி ஆகிய பகுதிகளில் முதல்வர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் பேசினார். அப்போது பொதுமக்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மழைநீர் எந்தப் பகுதிகளிலும் தேங்கவில்லை என்றும், சில பகுதிகளில் இருந்த மழைநீரை உடனுக்குடன் அகற்றப்பட்டதற்கும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

The post அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னை நிம்மதியாக உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: