திருவண்ணாமலை தீபமலைப் பகுதியில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் மீது பாறை உருண்டு 7 பேர் சிக்கினர்: மீட்பு பணி தீவிரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபமலைப்பகுதியில் ஒரு வீட்டின் மீது பாறை உருண்டு மண் சரிவு ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் நேற்று மிக கனமழை பெய்தது. இந்நிலையில், திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில், தீபம் ஏற்றும் மலை பகுதியில் சுமார் 100 மீட்டர் உயரத்தில், திடீரென மண் சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறை உருண்டு, மலை பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது விழுந்தது.

இதனால் அந்த வீட்டிற்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சிக்கி கொண்டனர். தொடர்ந்து மழை பெய்வதால் அப்பகுதி சேறும் சகதியுமாக மாறியது. இதனால் அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. உடனே இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்தும், கனமழை நின்ற பிறகே அந்தப் பகுதிக்கு செல்ல முடிந்தது. தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கிய வீட்டிற்கு அருகே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்பி சுதாகர், டிஆர்ஓ ராமபிரதீபன் மற்றும் தீயணைப்புத் துறையினர் நேற்று இரவு 8 மணி அளவில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். மீட்பு பணி குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில், ‘திருவண்ணாமலையில் இதுவரை எப்போதும் இல்லாத அளவில் மிக கனமழை பெய்தது. இதனால் மலையில் மண் சரிவு ஏற்பட்டு ஒரு வீடு முழுவதுமாக சிக்கி உள்ளது. அதில், இருந்தவர்கள் நிலை என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா அல்லது வேறு எங்காவது சென்றுள்ளனரா, எத்தனை நபர்கள் வீட்டுக்குள் இருந்தனர் என்கிற விவரம் இதுவரை உறுதியாக தெரியவில்லை. தொடர்ந்து, அந்தப் பகுதியில் மண் சரிந்து கொண்டிருப்பதாலும், பாறை உருண்டு விழும் ஆபத்தான நிலையில் இருப்பதாலும் இரவு நேரத்தில் மீட்பு பணியை மேற்கொள்வது சிக்கலாக இருக்கிறது.

எனவே, பேரிடர் மீட்பு குழுவுக்கு தகவல் அளித்திருக்கிறோம். அவர்கள் விரைந்து வந்ததும் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மலையடிவாரப் பகுதியில் மழை வெள்ளத்தால் ஒரு சில வீடுகள் சேதம் அடைந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து உள்ளோம். தொடர்ந்து, அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணித்து வருகிறோம். மீட்பு பணி மிக விரைவாக நடைபெறும்’ என்றார்.

 

The post திருவண்ணாமலை தீபமலைப் பகுதியில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் மீது பாறை உருண்டு 7 பேர் சிக்கினர்: மீட்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: