* பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என உறுதி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று துணை முதலர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மற்றும் கனமழை பாதிப்பை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திண்டிவனம் பகுதியில் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
மரக்காணத்தில் அரசு பள்ளியில் தங்கியிருந்த நரிக்குறவர்களுக்கு வேட்டி- சேலை மற்றும் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது நரிக்குறவர்கள் நிரந்தர கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்க வேண்டுமென அவரிடம் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து திண்டிவனம் பகுதி 24வது வார்டு வாகப் நகர், நகலாபுரம் நல்லியகொடன் நகர் செல்லும் பாலத்தில் கிடங்கல் கோட்டை ஏரியிலிருந்து வெளியேறும் வெள்ள நீர் ஆகிய இடங்களில் தேங்கிய மழை நீரை பார்வையிட்டு தேங்கிய நீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் விழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் விரைந்து மழைநீரை வெளியேற்றவும், எதிர்காலத்தில் நிரந்தர தீர்வு காண திட்ட அறிக்கை தயாரிக்கவும் உத்தரவிட்டார். அதேபோல் கீழ்பெரும்பாக்கம் ரயில்வே தரைப்பாலம், சேவியர் காலனி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி:
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலினால் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் 668 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 49.29 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மயிலம் பகுதியில் 50 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தற்போது 5, 6 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக மிக கனமழை பெய்து வருவதால் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கனமழையினால் மிக அதிகமாக பதிக்கப்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சியில் பொதுமக்கள் பாதுகாப்பாக 3 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலோர பகுதியான மரக்காணம், வானூர் தாலுகாவில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் புயல் காரணமாக 27 மரங்கள் முறிந்து விழுந்து அனைத்து மரங்களும் உடனுக்குடன் அகற்றப்பட்டுள்ளது. புயல் காரணமாக 125 மின்கம்பங்கள் விழுந்துவிட்டன.
மாற்றுக் கம்பங்கள் நடும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது வரை பசுமாடு, ஆடு, கோழிகள் என 5,513 கால்நடைகள் இறந்துள்ளன. அதேபோல் 11 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 5 பேரிடர் மேலாண்மை குழு வீரர்கள் மூலம் பொதுமக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு மருத்துவ வசதி அளிக்கப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழு ஒன்றும் மரக்காணம் தாலுகாவில் பொதுமக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு மருத்துவ வசதி அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 34 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 2000 பேர் தங்க வைக்கப்பட்டு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மழை நீரால் பெரிதும் பாதிக்கப்பட்ட 66 பகுதிகளில் மீட்பு பணிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும். வேளாண்மை துறை சார்பில் பயிர்கள் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மழை நின்ற 3 நாட்களுக்குபிறகு இதுகுறித்து துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடத்தி இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து துணை முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் புருஷோத்தமன் நகரில் மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட அவர், அருகில் உள்ள கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
The post பெஞ்சல் புயலால் கொட்டித்தீர்த்த அதிகனமழை விழுப்புரம், கடலூர், மரக்காணத்தில் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு appeared first on Dinakaran.