சென்னையில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட பிறகு நிருபர்களை சந்தித்து பேசியதாவது:
வங்கக்கடலில் உருவாகியிருந்த பெஞ்சல் புயல் காரணமாக நேற்று சென்னையில் கனமழை பெய்தது. கனமழை பெய்தாலும் நம்முடைய அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகவும், தூர்வாரும் பணிகளின் காரணமாகவும், பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். உங்களில் பல தொலைக்காட்சிகளிலும் இதைப் பற்றி பாராட்டி சொல்லியிருக்கின்றீர்கள். வடசென்னை பகுதிகளில் மழைநீரை அகற்றுவதற்கு ராட்சத மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு மழைநீர் அகற்றப்பட்டிருக்கிறது. தொடர்ந்து சில இடங்களில் அந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், மழைநீர் தேங்கும் இடங்களில் அதனை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,686 மோட்டார் பம்புகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளன. தேங்கிய இடங்களில் உடனுக்குடன் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் 21 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. கணேசபுரம் சுரங்கப் பாதை ரயில்வே மேம்பாலப் பணி காரணமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 32 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 1,018 நபர்கள் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பொதுமக்களுக்கு 9 லட்சத்து 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 30ம் தேதி அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று நான் அறிவித்திருந்தேன். அந்த அடிப்படையில், 386 அம்மா உணவகங்களில் 1,07,047 பேருக்கு உணவு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழையினை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் 22 ஆயிரம் பேர் மழைக்கால மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளை 2,149 களப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் சென்னை தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக, கொளத்தூர் தொகுதிக்கு நான் சென்றிருந்தேன். கடந்த காலங்களில் தண்ணீர் நிற்கும் பகுதிகளில் எங்கும் இப்போது தண்ணீர் தேங்கவில்லை. இதை மக்களே மகிழ்ச்சியாக தெரிவித்தார்கள். ஒரு சில ஊடகங்கள் தவிர்த்து பல்வேறு ஊடகங்களில் சென்னை மக்கள் அதை பாராட்டியிருக்கிறார்கள். அதற்காக நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநிலத்தின் மற்ற மாவட்டங்களின் நிலையை கடந்த இரண்டு நாட்களாக தலைமைச்செயலாளர் மூலமும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்களிடம் தொலைபேசி மூலமும் கேட்டு அறிந்துவருகிறேன். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், வரலாறு காணாத மழை அங்கு பதிவாகி உள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மயிலத்தில் 49 செ.மீ., மழையும், நெம்மேலியில் 46 செ.மீ., மழையும், வானூரில் 41 செ.மீட்டர் என பல பகுதிகளில் அதிகனமழை பதிவாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட அமைச்சரான பொன்முடியுடன் இணைந்து செயல்படுவதற்கு அமைச்சர்கள் சிவசங்கர், செந்தில் பாலாஜி களத்தில் உள்ளனர். அதேபோல், கடலூரில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் சி.வி.கணேசன் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
மேலும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வைத்துள்ளேன். விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சார்ந்த 12 குழுக்கள் விரைந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள பிற மாவட்டங்களிலிருந்து துய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களும் அதில் ஈடுபட உள்ளார்கள். டிச.1ம் தேதி நிலவரப்படி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 26 முகாம்களில் 1,373 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதோடு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த புயலின் காரணமாக தமிழ்நாட்டில் குறிப்பாக, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கவும், பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தேவையான நிதி வழங்கிடவும், பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்க ஒன்றிய அரசை கேட்டுக்கொள்ள இருக்கிறோம். திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மழை அதிக அளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அந்த மாவட்ட அலுவலர்களையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு முதல்வர் அளித்த பதில்:
உண்மையாகவே நேற்றிலிருந்து எந்த மின்தடையும் இல்லை. மாநகராட்சி மற்றும் அனைத்து துறைகளும் நன்கு வேலை பார்த்துள்ளார்கள். அவர்களுக்கு எங்களது பாராட்டுகள்.
முதல்வர்: நன்றிஒன்றிய அரசிடமிருந்து கூடுதலாக தமிழ்நாடு அரசு என்ன எதிர்பார்க்கிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழு வர வேண்டும் என்று எதிர் பார்க்கிறோமோ?
முதல்வர்: மழை இன்னும் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து கொண்டு வருகிறது. முழுமையாக நிற்கவில்லை. ஓரளவு மழை குறைந்த பின்பு தான் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதே போல், பயிர்சேதத்தைப் பொறுத்தவரையில் மழைநீர் வடிந்தவுடன் முறையாக கணக்கெடுப்பு செய்து, இழப்பீடு தொகை எப்படி வழங்க வேண்டும் என்பதை பிறகுதான் முடிவு செய்ய முடியும். நாளைய தினம் (டிச 2) தலைமைச்செயலகத்தில், சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் கூட்டம் நடத்த இருக்கிறோம். அதில் கலந்தாலோசித்து முடிவு எடுத்து, அதற்கு பிறகு ஒன்றிய அரசிற்கு இது குறித்து விளக்கமாக கடிதம் மூலம் தெரிவிப்போம்.
காணொலி காட்சி வாயிலாக அலுவலர்களுடன் கலந்தாலோசித்தீர்கள். நீங்கள் நேரடியாக செல்ல வாய்ப்பு இருக்கிறதா?
முதல்வர்: துணை முதல்வர், அமைச்சர்கள், மூத்த அரசு உயர் அலுவலர்களை அனுப்பி வைத்துள்ளோம். ஏற்கனவே, அந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த அனுபவமுள்ள அலுவலர்களையும் அனுப்பி வைத்துள்ளோம். தேவைப்பட்டால் நானும் நேரில் செல்வேன்.
The post பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்க ஒன்றிய அரசை கேட்க உள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.