×

சையத் மோடி சர்வதேச பேட்மின்டன் பி.வி.சிந்து, லக்‌ஷ்யா சென் சாம்பியன் பட்டம் வென்றனர்: பெண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்தியா வெற்றி

லக்னோ: சையத் மோடி சர்வதேச பேட்மின்டன் ஒற்றையர் இறுதிப் போட்டிகளில் நேற்று, பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஆண்கள் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷ்யா சென் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில் இரு முறை பதக்கங்கள் வென்றுள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சையத் மோடி பேட்மின்டன் ஒற்றையர் இறுதிப் போட்டியில் பெண்கள் பிரிவில் நேற்று, சீனாவின் லுவோ யு வுவை எதிர்கொண்டார்.

துவக்கம் முதலே உறுதியாகவும் நேர்த்தியாகவும் ஆடிய சிந்து, 21-14, 21-16 என்ற புள்ளிகள் அடிப்படையில் நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்‌ஷ்யா சென்- சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசன் மோதினர். இந்த போட்டியில் லக்‌ஷ்யா சென்னின் அபார ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஜேசன் திணறினார். முடிவில் 21-6, 21-7 என்ற புள்ளிக்கணக்கில் நேர் செட்களில் வென்ற லக்‌ஷ்யா சென் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பெண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் டிரீஸா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடியுடன் சீனாவின் பவோ லீ ஜிங், லி கியான் ஜோடி மோதியது. இப்போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய வீராங்கனைகள், 21-18, 21-11 என்ற புள்ளிகள் அடிப்படையில் நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். இப்பட்டத்தை வெல்லும் முதல் இந்திய பெண்கள் இரட்டையர் ஜோடி இவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

The post சையத் மோடி சர்வதேச பேட்மின்டன் பி.வி.சிந்து, லக்‌ஷ்யா சென் சாம்பியன் பட்டம் வென்றனர்: பெண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்தியா வெற்றி appeared first on Dinakaran.

Tags : Syed Modi ,International Badminton B. V. Sindhu ,Lakshya Sen ,India ,Lucknow ,Olympic Games ,Dinakaran ,
× RELATED அதிரடியாக இறுதிக்குள் நுழைந்த சிந்து: சையத் மோடி பேட்மின்டன் போட்டி