நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், அடுத்த மாதம் ஜனவரியில் அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், தனக்கு விருப்பமான நபர்களை பல்வேறு துறைகளுக்கும் தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் அவரது ஆதரவாளரான இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ்யப் படேலை, ‘ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்’ (எப்பிஐ) என்ற புலனாய்வு அமைப்பின் அடுத்த இயக்குநராக அறிவித்துள்ளார். அவரை ‘அமெரிக்கா முதல் போராளி’ என்று டிரம்ப் பாராட்டி உள்ளார். டிரம்பின் புதிய நிர்வாகத்தில் ஏற்கனவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, துளசி கபார்ட் உள்ளிட்ட சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது காஷ்யப் படேலை எப்பிஐ இயக்குனாராக டிரம்ப் அறிவித்துள்ளது முக்கியமானதாக கருதப்படுகிறது. இதுகுறித்து டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘காஷ்யப் படேல் அமெரிக்காவின் முதல் போராளி; அமெரிக்க எல்லைகளில் அதிகரித்து வரும் ஆள்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலை அவர் கட்டுப்படுத்துவார். மத்திய புலனாய்வுப் அமைப்பின் அடுத்த இயக்குநராக காஷ்யப் படேல் பணியாற்றுவார் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
புத்திசாலியான அவர், அமெரிக்காவில் அதிகரித்து குற்றங்களை முடிவுக்கு கொண்டு வருவார். புலம்பெயர்ந்த நபர்களால் நடக்கும் குற்றங்களையும், அந்த கும்பல்களையும் அகற்றுவார். எப்பிஐ-க்கு நம்பகத்தன்மை, துணிச்சல் மற்றும் நேர்மையை மீண்டும் கொண்டு வரும் வகையில் அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டியின் கீழ் காஷ்யப் படேல் பணியாற்றுவார்’ என்று கூறியுள்ளார்.
The post அமெரிக்க புலனாய்வு அமைப்பான ‘எப்பிஐ’-யின் இயக்குனராக இந்திய வம்சாவளி நியமனம்: டிரம்ப் அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.