சென்னை: எடப்பாடி பழனிசாமியின் கார் டயர் கூட எங்கும் செல்லவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி குடுத்துள்ளார். அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்த ஜெயக்குமாருக்கு, அமைச்சர் சேகர் பாபு பதிலடி. சென்னை பட்டாளம் பகுதியில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீரை அகற்றும் பணியினை பார்வையிட்டு வருகின்றனர்.
பட்டாளம் பகுதியில் ஆய்வு செய்த பின் அமைச்சர் சேகர் பாபு பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கூறியதாவது; சென்னையில் இன்று 200 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிக திறனுள்ள 600 ஹெச்.பி. மின் மோட்டார்களை கொண்டு மழைநீர் வெளியேற்றப்படுகிறது. அரசு நடவடிக்கைகளால் வெள்ள பாதிப்பை திறமையோடு எதிர்கொண்டதாக மக்கள் பாராட்டுகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறக்கமின்றி 24 மணிநேரமும் மக்களுடைய நலனுக்காக இயங்கி கொண்டிருக்கிறார். எங்களையும் இயக்க வைத்து கொண்டிருக்கிறார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எவ்வித மழை, வெள்ள பாதிப்பு பணிகளையும் நேரில் ஆய்வு செய்ததில்லை. 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மழை, வெள்ளப்பாதிப்பின்போது கூட எடப்பாடி பழனிசாமியின் கார் டயர் கூட எங்கும் செல்லவில்லை. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வருவதற்கு முன்பே மக்களை சந்தித்து ஆய்வு மேற்கொண்டார் என்று கூறியுள்ளார்.
The post முதலமைச்சர் உறக்கமின்றி 24 மணிநேரமும் மக்களுடைய நலனுக்காக இயங்கி கொண்டிருக்கிறார்: அமைச்சர் சேகர் பாபு! appeared first on Dinakaran.