×

அதிரடியாக இறுதிக்குள் நுழைந்த சிந்து: சையத் மோடி பேட்மின்டன் போட்டி

லக்னோ: ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, லக்னோவில் நேற்று நடந்த சையத் மோடி சர்வதேச சூப்பர் 300 டோர்னமென்ட் பேட்மின்டன் அரை இறுதிப் போட்டியில் சக இந்திய வீராங்கனை உன்னதி ஹூடாவை நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டியில் அதிரடியாக நுழைந்தார். உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் நேற்று, சையத் மோடி சர்வதேச சூப்பர் 300 டோர்னமென்ட் பேட்மின்டன் அரை இறுதிப் போட்டி நடந்தது.

இதில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து – உன்னதி ஹூடா மோதினர். போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, உன்னதியை திணறடித்து அதிக புள்ளிகளை பெற்றார். சிந்துவின் சிறப்பான ஆட்டத்தால் இந்த போட்டி 36 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. சிந்து 21-12, 21-9 புள்ளிக் கணக்கில் நேர் செட்களில் உன்னதியை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதையடுத்து, தாய்லாந்தின் லலின்ராத் சாய்வான் – சீனாவின் லுவோ யு வு இடையில் நடக்கும் மற்றொரு அரை இறுதியில் வெல்லும் வீராங்கனையுடன் இறுதிப் போட்டியில் சிந்து பங்கேற்பார்.

துவக்கம் முதலே சிறப்பாக ஆடி வரும் சிந்து, இறுதிப் போட்டியிலும் அதிரடி காட்டி கோப்பையை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையே நேற்று நடந்த கலப்பு இரட்டையர் அரை இறுதிப் போட்டியில் இந்தியாவின் துருவ் கபிலா – தனிஷா கிராஸ்டோ ஜோடி, சீனாவின் ஜி ஹாங் ஸூ – ஜியா யி யாங் ஜோடியுடன் மோதியது.

இப்போட்டியில் 21-16, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் நேர் செட்களில் இந்திய ஜோடி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு கலப்பு இரட்டையர் அரை இறுதிப் போட்டி, சீனாவின் பின் யி லியாவோ – கே ஜின் ஹுவாங் ஜோடி, தாய்லாந்தின் தெச்சபோல் புவரனுக்ரோ – சுபிசரா பேசம்ப்ரான் ஜோடி இடையே நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் ஜோடியுடன், இந்தியாவின் துருவ் கபிலா – தனிஷா கிராஸ்டோ ஜோடி இறுதிப் போட்டியில் மோத உள்ளது.

The post அதிரடியாக இறுதிக்குள் நுழைந்த சிந்து: சையத் மோடி பேட்மின்டன் போட்டி appeared first on Dinakaran.

Tags : Sindh ,Syed Modi Badminton Tournament ,Lucknow ,India ,Olympic ,PV ,Sindhu ,Unnati Hooda ,Syed Modi International Super 300 Tournament ,Dinakaran ,
× RELATED நாட்டையே உலுக்கிய ஐடி ஊழியர் தற்கொலை...