அதோடு 10க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர் ஐதராபாத் திருச்சி கொழும்பு விமான நிலையங்களுக்கு திரும்பிச் சென்றன. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 40க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட முடியாமல் தாமதம் ஆகின. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமான நிறுவனம், தனது விமான சேவைகளை அனைத்தையும் ரத்து செய்தன. ஆனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் மற்ற விமான நிறுவனங்களின் விமானங்கள் நிலை என்ன என்பது தெரியாமல் பயணிகள் பெரும் குழப்பத்துக்கு ஆளானார்கள்.
இதையடுத்து பயணிகள் சென்னை விமான நிலைய சமூக வலைதளம் பக்கத்தில் விமான நிலைய அதிகாரிகளை கேட்டபோது, அவர்கள் அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல், நீங்கள் பயணம் செய்ய இருக்கின்ற விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு கேளுங்கள் என்று பதில் கொடுத்தனர். ஆனால் விமான நிறுவனங்களின் தொலைபேசி எண் இணைப்புகள் பயணிகளுக்கு கிடைக்கவில்லை இதனால் பயணிகள் செய்வதறியாது, சென்னை விமான நிலையத்தில் தவித்தனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையம் நேற்று பகல் 12.30 மணியிலிருந்து இன்று அதிகாலை 4 மணி வரையில் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விமானங்களில் பயணம் செய்ய வந்த பயணிகள், சென்னை விமான நிலையத்தில் பெருமளவு தவிப்புக்கு உள்ளாகி கொண்டு இருக்கின்றனர். பெங்களூர், ஐதராபாத், திருச்சி, கொழும்பு ஆகிய இடங்களுக்கு திரும்பிச் சென்ற விமானங்கள் எப்போது மீண்டும் சென்னைக்கு திரும்பி வரும் என்பது தெரியாமல், அந்த விமானத்தில் வரும் பயணிகளை வரவேற்று அழைத்து செல்ல, சென்னை விமான நிலையத்திற்கு வந்தவர்களும் தவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக விமானங்கள் புறப்பாடு, வருகை குறித்து அறிவிக்கும் டிஸ்ப்ளே போர்டுகளில், விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டது குறித்தோ, விமானங்கள் தாமதமாக புறப்பட போவது குறித்தோ, முறையான தகவல்கள் எதுவும் இல்லாததால் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், சென்னையில் தரையிறங்க முடியாமல் வேறு விமான நிலையங்களுக்கு சென்ற விமானங்கள், புயல் கரையைக் கடந்து, வானிலை சீரடைந்த பின்பு சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி வரும். எனவே அந்த விமானங்கள் எப்போது சென்னைக்கு திரும்பி வரும் என்று உறுதியாக கூற முடியாது. மேலும் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு யாரும் பொறுப்பாக முடியாது என்றனர்.
* பயணிகள் வசதிக்காக பஸ் இயக்கம்
சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி வரை மூடப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அது நாளை அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்படுவதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலையம் மூடப்பட்டதால் ஏராளமான பயணிகள் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். கால் டாக்ஸி, ப்ரீபெய்ட் டாக்ஸி போன்றவைகளும் இயக்கப்படவில்லை.
இதனால் சென்னை விமான நிலைய பயணிகள் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை மாநகர பேருந்துகள், விமான நிலையத்திற்கு வெளியில் ஜிஎஸ்டி சாலையில் போகும் பேருந்துகள் அனைத்தும், சென்னை விமான நிலையத்திற்குள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள், நேற்று மாலையிலிருந்து செய்யப்பட்டன. இதனால் சென்னை விமான நிலையத்தில் காத்துக் கிடக்கும் பயணிகளுக்கு அது மிகுந்த வசதியாக உள்ளது. புயல் மழை ஓய்ந்து வானிலை சீரடைந்து, வழக்கமான போக்குவரத்து தொடங்கும் வரை இந்த ஏற்பாடு நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
The post ஓடுபாதை முழுவதும் மழை நீர் வெள்ளம் சென்னை விமானநிலையம் மூடப்பட்டது: பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.