சென்னை: கடந்த நான்கு நாட்களாக போக்குகாட்டி வந்த பெஞ்சல் புயல் நேற்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. சூறாவளிக் காற்றால் பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. வங்கக்கடல் பகுதியில் கடந்த 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது படிப்படியாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இது தற்காலிக புயலாக மாறி பின்னர் மீண்டும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்று முதலில் வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது.
இதற்கு முக்கிய காரணமாக புயலின் நகரும் வேகம் தான் என்று சொல்லப்பட்டது. முதலில் 15 முதல் 30 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திடீரென புதுவையிலிருந்து 300 கி.மீ தொலைவில் நங்கூரம் இட்டதை போல நின்றுவிட்டது. அதுவரை திரண்டிருந்த மேகங்கள் அனைத்தும் கடலிலேயே மழையாக கொட்டி தீர்த்தது. எனவே கடலில் இது தற்காலிக புயலாக மாறி பின்னர் மீண்டும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் முதலில் கணிக்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
நேற்று முன்தினம் காலை முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் அதிகரிக்க தொடங்கியது. மட்டுமல்லாது காற்றின் வேகமும் அதிகரித்தது. தாழ்வு மண்டலம் வலுவிழக்காமல், தீவிரமடைந்தது. எனவே, புயலாகவே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அந்த புயலுக்கு பெஞ்சல் என பெயரிடப்பட்டது. இந்த புயல் எதிரொலியாக வட கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கடலூர், விழுப்புரம் மரக்காணம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டம் அரங்கோணம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை விடியவிடிய மழை பெய்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை-பழைய மகாலிபுரம் சாலையில் நேற்று மதியம் தற்காலிகமாக பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது. வட கடலோர மாவட்டங்களைப் போல் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்தனர். அது மட்டுமல்லாமல் பேய் இரைச்சலுடன் வேறு காற்று சுழன்று, சுழன்று வீசியது. இதனால், வீடுகளில் இருந்தவர்கள் ஒருவித அச்ச உணர்வுடன் காணப்பட்டனர். ஏதாவது மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஒவ்வொருவரிடமும் தொற்றிருந்ததை பார்க்க முடிந்தது. பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து காட்சியளித்தது. இதனால், பஸ் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பஸ்கள் அனைத்தும் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. மேலும் பல இடங்களில் போக்குவரத்து தடை செய்யட்டது.
இதனால், தனியார் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். இதே போல, மின்சார ரயில், பறக்கும் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் தமிழக அரசு மக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஜே.சி.பி இயந்திரங்களும், படகுகளும், மோட்டார் பம்புகளும் தண்ணீரை வெளியேற்ற பயன்படுத்தப்பட்டன.
மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 11 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்ட்டிருந்தனர். அதிநவீன மீட்பு உபகரணங்களுடன் ஒவ்வொரு குழுவிலும் 30 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். தீயணைப்பு படையினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட தயார்நிலையில் உள்ளனர். போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில், 3 இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள் தலைமையில் மீட்பு படையினர் அனைத்து சாதனங்களுடன் 24 மணி நேரமும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, ‘பெஞ்சல்’ புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருடனும் முதல்வர் மழை விபரம், முகாம்கள் விபரம், தண்ணீர் வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்து தக்க அறிவுரைகள் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறைகளுக்கு பொதுமக்களிடமிருந்து தொலைபேசி வாயிலாக பெறப்படும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை முடுக்கி விட்டார்.
தேங்கிய மழை நீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை உடனடியாக செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை மண்டலத்திற்கும் நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு அதிகாரிகளும் பணிகளை தூரிதப்படுத்தினர். மேலும் எம்பி, எம்எல்ஏக்களும் களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக பணியாற்றினர்.
தொடர்ந்து நேற்று மாலை சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியில், ‘‘தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “பெஞ்சல்” புயல் நேற்று மாலை சென்னையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. இந்த புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுவைக்கு அருகில் நேற்று மாலை கரையை கடக்கும். கரைக்கு அருகே வரும்போது புயலின் நகர்வு வேகம் குறையும். புயல் முழுமையாக கரையை கடக்க சில மணி நேரங்கள் ஆகலாம்.
மயிலாடுதுறை முதல் திருவள்ளூர் வரை 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். புயல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அதி கனமழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், வேலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்’’ என்றார்.
ஆனால், புயல் கரையை கடப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. பின்னர் இரவு 7 மணியளவில் பெஞ்சல் புயலின் ஒரு பகுதி புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையே கரையை தொட்டது. இதனால் மரக்காணம் மற்றும் செய்யூர் பகுதிக்கிடையே 90கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. புதுவையில் மழை விடிய விடிய பெய்தது. அதேநேரத்தில் சென்னை முதல் வட மாவட்டங்கள் முழுமையாக காற்று பலமாக வீசியது. பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.
புயல், சுமார் 3 மணி முதல் 3.30 மணி வரை கடுமையாக சூறாவளியாக வீசி, கரையை கடந்தது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் இன்றும் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
* சென்ட்ரல் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்..
சென்னையில் பெய்த மழையால் வியாசர்பாடி பாலம் அருகே கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் சில விரைவு ரயில்கள் நேற்று கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டன.
அதாவது சென்ட்ரல்- கொல்லம் சிறப்பு ரயில் (நள்ளிரவு 12.30மணி), சென்ட்ரல் – ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் (இரவு 11.55மணி) சென்ட்ரல் -திருவனந்தபுரம் ரயில் (இரவு 8 மணி), சென்ட்ரல் – பெங்களூரு மெயில் (இரவு 11.30மணி), சென்ட்ரல் – கோவை அதிவிரைவு ரயில் (இரவு 11மணி), சென்ட்ரல் – கோவை சேரன் எக்ஸ்பிரஸ் (இரவு 10.30மணி) புறப்பட்டு சென்றது. அதேபோல, சென்ட்ரலில் இருந்து பெங்களூரு, மங்களூரு, திருப்பதி மற்றும் மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவள்ளூரில் இருந்து புறப்பட்டது. சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன.
* 7 ஆயிரம் நகைக்கடைகள் மூடல்
பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த நிலையில் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நகைக்கடைகள் அனைத்தும் நேற்று இயங்கவில்லை. மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதன் காரணமாகவும், கடைகளுக்கு வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும் நகைக்கடைகள் மூடப்பட்டதாக சென்னை தங்கம், நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்தார். மேலும் மழை பாதிப்பு இருக்கக்கூடிய மாவட்டங்களில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் மூடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். நேற்று மட்டும் மொத்தம் 7,000 நகைக்கடைகள் மூடப்பட்டன.
* புயல் இருக்கும் வரை மழை மேகங்கள் உருவாகும்
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘சென்னையின் மையப் பகுதிகளில் மிதமான தீவிர மழை தொடரும். புயல் இருக்கும் வரை மழை மேகங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். எனவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. ஏரிகளின் சேமிப்பை மேம்படுத்த நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை கிடைக்கும் என நம்புகிறோம். காலை 6 மணி முதல் வடக்கு மற்றும் தெற்கு சென்னை பகுதிகளில் 130 முதல் 150 மி.மீ மழை பதிவாகியுள்ளது’’ என்று பதிவிட்டுள்ளார்.
* 100 சதவீதம் ஆவின் பால் வினியோகம்
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை மழை அடித்து நொறுக்கியது. இருந்த போதிலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100 சதவீதம் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டது. கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படவில்லை. தொடர்ந்து மழை பெய்தாலும் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
* 9 மணி நேரத்தில் ஆவடியில் 24 செ.மீ. மழை
பெஞ்சல் புயலால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை மழை கொட்டி தீர்த்தது. இதில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 9 மணி நேரத்தில் சென்னை ஆவடியில் 24 சென்டி மீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக கும்மிடிப்பூண்டியில் 22 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதே போல திருத்தணி 17 செ.மீ, தாமரைப்பாக்கம் 16 செ.மீ, ஜமீன் கோட்டூர்புரம் 15 செ.மீ, பொன்னேரி, செங்குன்றத்தில் தலா 14 செ.மீ, அரக்கோணம், ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், சோழவரத்தில் தலா 13 செ.மீ, பூண்டியில் 12 செ.மீ, சென்னை மீனம்பாக்கம், செங்கல்பட்டு, பூந்தமல்லியில் தலா 11 செ.மீ, நுங்கம்பாக்கம், திருவாலங்காட்டில் தலா 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை நிறுத்தம்
பெஞ்சல் புயலால் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை நேற்று இரவு முதல் கொட்டி தீர்த்தது. இந்த மழை நேற்று முழுவதும் நீடித்தது. இதனால் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் மின்சார ரெயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து வழக்கமான நேரத்தை விட 45 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மற்றும் வேளச்சேரி செல்லும் மின்சார ரயில்கள் குறைக்கப்பட்டன. தொடர்ந்து பலத்த காற்று வீசியதால் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையேயான பறக்கும் மின்சார ரயில் சேவை நண்பகல் 12.15 மணி முதல் ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இயக்கப்பட்ட ரயில்களில் வழக்கத்தை விட கூ்ட்டம் அதிகமாக காணப்பட்டது.
The post புதுச்சேரி அருகே பெஞ்சல் புயல் கரை கடந்தது: 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது; சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர் உள்பட வட மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தது கனமழை appeared first on Dinakaran.