கோபி: ஈரோடு அருகே இன்று அதிகாலை நடந்த துப்பாக்கி சூட்டில் தொழிலாளி பலியானார். இதுதொடர்பாக விவசாயியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள நாகர்பாளையம் கிராமம் கீரிப்பள்ளம் தோட்டத்தை சேர்ந்தவர் மோகன்லால் (55), விவசாயி. இவர் மனைவி ராஜதிலகம், மகன் தியானேஷ்வரன், மோகன்லாலின் தாயார் கோகிலாம்பாள், மோகன்லால் மனைவியின் தாயார் (மாமியார்) சுப்புலட்சுமி ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். மோகன்லால் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்துள்ளார். இவர், வீட்டின் அருகே உள்ள அவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் விவசாய பயிர்களுடன் சந்தன மரங்களையும் வளர்த்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் 2 சந்தன மரங்களை, மர்ம நபர்கள் வெட்டிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது சத்தம் கேட்டு விவசாயி மோகன்லால் அங்கு சென்று பார்ப்பதற்குள் மர்ம நபர்கள் மரத்தை வெட்டி கடத்தி சென்று விட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு இரவு நேரங்களில் சத்தம் கேட்கும் போதெல்லாம், கையில் துப்பாக்கியுடன் தான் மோகன்லால் வீட்டை விட்டு வெளியே வருவது வழக்கம். நேற்று இரவு வழக்கம்போல் மோகன்லால் வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு மணிக்கு மோகன்லால் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த 2 வளர்ப்பு நாய்கள் வழக்கத்தை விட சத்தமாக குரைக்கவே, சந்தேகமடைந்த மோகன்லால் கையில் துப்பாக்கியுடன் வீட்டை விட்டு வெளியே வந்து உள்ளார். அப்போது வீட்டிற்கு சிறிது தூரத்தில் சுமார் 100 அடி தூரத்தில் இருந்து ஒரு நபர் கையில் 2 அடி நீளமுள்ள அரிவாளுடன் அவரை வெட்டுவதற்காக ஓடி வந்தது கண்டு அதிர்ச்சியடைந்து, கையில் இருந்த துப்பாக்கியால் அந்த நபரை சுட்டுள்ளார்.
இதில் அந்த நபர், மார்பில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரே கோபி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கியை கைப்பற்றி மோகன்லாலிடம் விசாரணை நடத்தினர். இதில், துப்பாக்கியால் சுட்டபோது அருகில் உள்ள கோபி நாகர்பாளையம் சாலையில் 2 பேர் சத்தமிட்டதாக தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து உடனடியாக போலீசார் அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை செய்தனர். அப்போது, கோபி அருகே உள்ள மொடச்சூர் செங்கோட்டையன் காலனியை சேர்ந்த கண்ணன் மகன்கள் மூர்த்தி (32), விஜய் (26) ஆகியோர் இருசக்கர வாகனத்துடன் அப்பகுதியில் சுற்றித்திரிந்தது தெரிந்தது. போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
இதில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தது 2 வாலிபர்களின் தந்தை கண்ணன் (50), அவர் சுமை தூக்கும் தொழிலாளி என தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்தபோது, நேற்று காலையில் இருந்தே, கண்ணன் ஒரு மாதிரியாக சத்தமிட்டுக்கொண்டு மனநிலை பாதித்தவாறு இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த தந்தை திடீரென மாயமானதால், தந்தையை தேடி மகன்கள் இருவரும் வந்தபோது, பைக் பெட்ரோல் இன்றி நின்றுள்ளது. இதனால், பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் போட்டுவிட்டு மீண்டும் இருவரும் தந்தையை தேடி வந்துள்ளனர். அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து 2 பேரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோபி தாசில்தார் சரவணக்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கண்ணனின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். கோபி போலீசார் விவசாயி மோகன்லால் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிராம மக்கள் வேதனை
கடந்த 2 மாதங்களுக்கு முன் சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியது குறித்து அப்போது கோபி போலீசில் மோகன்லால் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மரங்களை வெட்டி கடத்திய நபர்கள், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றிருந்தனர். அந்த வாகனத்தை மோகன்லால் தோட்டத்திலேயே நிறுத்தி வைக்குமாறும், இருசக்கர வாகனத்தை கேட்டு யாராவது வந்தால், தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். ஆனால், இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சென்று உள்ளனர். இரு சக்கர வாகனத்தை வைத்து, சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி சந்தன மரக்கடத்தல் கும்பலை கைது செய்து இருந்தால், தற்போது துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
The post அரிவாளுடன் வந்த தொழிலாளியை விவசாயி சுட்டதில் பலி: ஈரோட்டில் அதிகாலை பரபரப்பு appeared first on Dinakaran.