சென்னையை நெருங்கியது; பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: விமானம், ரயில் போக்குவரத்தும் பாதிப்பு


சென்னை: தமிழகத்தை மிரட்டி வந்த பெஞ்சல் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகபாதிக்கப்பட்டது. புயல் கரையை கடக்கும் வரை பொது மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் கடந்த 23ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இது தற்ேபாது பெஞ்​சல்’ புயலாக வலுப்​பெற்றுள்​ளது. இது இன்று காலை 5.30 மணி நிலவரப்படி வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு கிழக்கே 150 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 110 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 13 கிமீ வேகத்தில் நகர்கிறது.

காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி கடற்கரை பகுதியில் கரையை கடக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. ஆனால் தற்போது இன்று மாலை கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரித்து இருந்தது. அதன்படி கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி புரிய அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை – பழைய மகாலிபுரம் சாலையில் இன்று மதியம் தற்காலிகமாக பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, புறநகர்ப் பகுதிகளில் இன்று நகைக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட கடலோர மாவட்டங்களைப் போல் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஜே.சி.பி இயந்திரங்களும், படகுகளும், மோட்டார் பம்புகளும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 11 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதிநவீன மீட்பு உபகரணங்களுடன் ஒவ்வொரு குழுவிலும் 30 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். தீயணைப்பு படையினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட தயார்நிலையில் உள்ளனர். போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில், 3 இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள் தலைமையில் மீட்பு படையினர் அனைத்து சாதனங்களுடன் 24 மணி நேரமும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 13 செ.மீ மழை பெய்துள்ளது. அதனை தொடர்ந்து, கத்திவாக்கத்தில் 12 செ.மீ, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர் தலா 9 செ.மீ, பொன்னேரி, மணலி, ஐஸ் ஹவுஸ், மத்திய சென்னையில் தலா 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவழை இன்று காலை வரை இயல்பை விட 12 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை விடிய, விடிய கனமழை கொட்டி வருகிறது.

தொடர்ந்து இன்று பிற்பகல் வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கும் சூழ்நிலை உருவானது. சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தண்ணீர் தேங்கியதால் பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும் வழிகளில் செல்லாமல் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து தடைப்பட்டதால் அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் புயல் கரையை கடக்கும் வரை பொது மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

புறநகர் மின்சார ரயில் சேவை குறைப்பு:
கனமழை எதிரொலி காரணமாக சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டது. வழக்கமான நேர அட்டவணைப்படி இல்லாமல் குறைந்த அளவிலான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சென்னை மெட்ரோ ரயில் அறிவிப்பு:
சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மெட்ரோ ரயில் சேவைகள் எவ்வித தடை, தாமதமும் இன்றி வழக்கம் போல் இயங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக மெட்ரோ ரயில் நிலைய படிகள், லிஃப்ட்களைப் பயன்படுத்தும்போது பயணிகள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். கோயம்பேடு, செயின்ட் தாமஸ் மவுன்ட், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உதவிக்கு 1860 425 1515 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், பெண்களுக்கான ஹெல்ப்லைன் 155370 என்று அறிவித்துள்ளது. 18 விமானங்கள் ரத்து. புயல் காரணமாக சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. சென்னையில் இண்டிகோ விமான நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகைக்கடைகளில் விடுமுறை: பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து நகைகடைகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் தெரிவித்துள்ளார். இதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் இன்று மூடப்பட்டுள்ளது.

24 மணி நேரம் ஆவின் சேவை:
கனமழையை கருத்தில் கொண்டு சென்னையில் 24 மணிநேரமும் ஆவின் சேவை இயங்கும் என அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி ஆவின் பால் விநியோகம் செய்யப்படும் என்றும் அதிகபட்சமாக ஒருவர் 4 பால் பாக்கெட்டுகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது. இதையடுத்து கனமழையிலும் ஆவின் சேவை 24 மணி நேரம் இயங்கியது. மேலும் தற்காலிக விற்பனை நிலையம் அமைத்து ஆவின் பால் பவுடர் மற்றும் பால் விநியோகக்கப்பட்டது.

இன்று அல்லது நாளை கரையை கடக்கும்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் கடந்த 24ம் தேதி இலங்கைக்கு தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30-க்கு பெஞ்சல்’ புயல் உருவானது. புயல் உருவாவாதில் சில குழப்பங்கள் இருந்ததால் அதுபற்றிய மாறுபட்ட தகவல்கள் வெளியானது. ஆனால், இப்போது ஏற்கெனவே கணித்தபடி புயல் சின்னம் தீவிரமடைந்து ‘பெஞ்சல்’ புயலாக உருவாகி விட்டது. தமிழக கடல் பகுதிக்குள் நுழைந்ததும் வேகம் எடுத்து புயலாக மாறிவிட்டதால் இனி அது புயலாகத்தான் கரையை கடக்கும்.

இந்தப் புயல் நாகை மாவட்டத்துக்கு கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 160 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. இது காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெஞ்சல்’ புயல் இன்று இரவு அல்லது நாளை புதுச்சேரி அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை காலை 8.30 மணி வரை கனமழை பெய்யும். புயல் கரையைக் கடக்கும் வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சென்னையை நெருங்கியது; பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: விமானம், ரயில் போக்குவரத்தும் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: