மாட்டுச் சந்தைகளில் அடிப்படை வசதி ஏற்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

ஈரோடு : மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பேசினர். அப்போது அவர்கள் பேசியதாவது: கீழ்பவானி பாசனத்தில் அரசாணைக்கு புறம்பாக தவறான நீர் நிர்வாகம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பல ஆண்டுகளாக தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. காவிரி தீர்ப்பு இன்றும் நடைமுறையில் உள்ளது.அதன்படி கீழ்பவானி வடி நிலகோட்டத்தில் உள்ள அனைத்து பாசனங்களுக்கும் ஒரு போகம் தண்ணீர் உறுதி செய்த பின்னரே 2ம் போகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். நடப்பு ஆண்டில் அது பின்பற்ற விடவில்லை. வரும் ஜனவரியில் அதற்கு தண்ணீர் திறக்க வேண்டும். இதை உறுதிப்படுத்திய பின்னரே மற்ற பாசனங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் கருங்கல்பாளையம் மற்றும் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் ஆகிய 2 இடங்களில் மாட்டுச்சந்தைகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அளவில் மிகப்பெரும் மாட்டுச் சந்தைகளாக அறியப்படும் இந்த மாட்டுச் சந்தைகளில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால், மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரும்போது ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை முடிந்து வெளியில் செல்லும்போது ரூ. 50 முதல் ரூ.80 வரையிலும் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதேபோல வாகனங்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்படுகிறது. இதில் சந்தைக்கு வியாபாரத்துக்கு வரும்போது மட்டும் தான் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். வியாபாரம் முடிந்து வெளியில் செல்லும்போது கட்டணம் வசூலிப்பது சட்டத்துக்கு புறம்பானது. எனவே பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த விதிமீறல் குறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல மரமேறும் தொழிலாளர்களுக்கான லைசென்ஸ் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும். கள் உணவின் ஒரு பகுதி. அது போதைப் பொருள் அல்ல என்பதை வலியுறுத்தி கடந்த 19 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

அதன் அடிப்படையில் 16-வது ஆண்டாக வரும் ஜனவரி 21ம் தேதி கள் இறக்கப்படும். மேட்டூர் வலது கரை பாசனத்தில் வரும் ஜனவரி 15ம் தேதி வரை தண்ணீர் திறப்பை நீட்டிப்பு செய்து வழங்க வேண்டும். பவானியில் உள்ள அரசு விதைப்பண்ணைக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலம் பாழாகி கிடக்கிறது. மீட்டு, மண் பரிசோதனை நடத்தி பயனுள்ள வகையில் அந்த இடத்தை பயன்படுத்த வேண்டும்.

கீழ்பவானி பாசனத்துக்கு உட்பட்ட இரண்டாம் போக கிளை வாய்க்கால்கள் இருக்கும் இடம் தெரியாமல் புதர் மண்டி கிடக்கின்றன. எனவே, அவற்றை சுத்தப்படுத்த 100 நாள் வேலை திட்டத்தில் அனுமதி அளிக்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கான கடன் தொகையை மத்திய கூட்டுறவு வங்கியில் சென்று பெற்றுக்கொள்ள செல்கின்றனர்.

அந்த நடைமுறை மாற்றி அந்தந்த கூட்டுறவு கடன் சங்கத்திலேயே விவசாயிகளுக்கு முழு கடன் தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை விவசாய பொருள்கள் விற்பனை நிலையங்களில் உரிய ஆய்வு மேற்கொண்டு அவற்றின் உண்மை தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.தடப்பள்ளி அரக்கன் கோட்டை பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் காலதாமதம் இன்றி கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் நெல்லை பாதுகாக்கும் வகையில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து சேதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதை நிலக்கடலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு சாகுபடியில் புதிய நடைமுறையை விவசாயிகள் இடத்தில் அறிமுகப்படுத்தி அதிக மகசூல் கிடைத்திட முயற்சிகள் எடுக்கவேண்டும். பாசன பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வன உரிமை சட்டம் கடந்த 18 ஆண்டுகளாக முறையாக அமல்படுத்த படாமல் உள்ளது. அவற்றை அமல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி, பர்கூர் மலைப் பகுதிகளில் வன கிராம சபை கூட்டங்களை நடத்தி வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக மலைப் பகுதிகளில் ரசாயன உரங்களின் பயன்பாடுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை மலைப்பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும். உன்னிச் செடிகளை அப்புறப்படுத்திட வேண்டும். மலைப்பகுதி நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளுக்கும், முதலமைச்சர் நிவாரண நிதி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்பவானி பாசன சபை தேர்தலை நடத்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்க வேண்டும். பி.எம். கிசான் தொகையை ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ. 12 ஆயிரமாக உயர்த்தி வழங்க எடுக்க வேண்டும். மரவள்ளி விலை வீழ்ச்சியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளிடம் இதற்காக ஒரு சதவீதம் ஜிஎஸ்டி வசூலிப்பதை கைவிட வேண்டும். இயற்கை விவசாய விளைபொருள்கள் விற்பனைக்கு சந்தை ஏற்படுத்தி தர வேண்டும்.

காளிங்கராயன் வாய்க்காலில் 25,000 ஏக்கர் மஞ்சள்,வாழை பயிர்கள் சாகுபடிக்கு நிலுவையில் உள்ளன. எனவே காளிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பை நீட்டிக்க வேண்டும். ஆயக்கட்டு உரிமை அடிப்படையில் அதனை வழங்க வேண்டும். மஞ்சளில் இலைப்புள்ளி நோய் தாக்குதல் குறித்து ஆய்வு செய்து மகசூல் இழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாமாயில் இறக்குமதியை முற்றிலும் தடை செய்து, உள்நாட்டு எண்ணெய் வித்து உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். விவசாயிகள் மருந்தகம் ஏற்படுத்தி தர வேண்டும்.

நமது மாவட்டத்தில் மரபணு மாற்ற விதைகள் ஊடுருவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்பவானி பாசனத்தில் தண்ணீர் திறப்பை 15 நாட்களுக்கு அதிகப்படுத்தி தர வேண்டும். நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.3,000 விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயக்கட்டு பாசன சபைக்கான தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து 70 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் அவர்கள் கூட்டத்தில் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் பதில் அளித்தனர்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை பொறுப்பு) பாமாமணி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மனோகரன்,தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி, ஈரோடு விற்பனை குழு செயலாளர் சாவித்திரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் மற்றும் நீர்வள ஆதாரத்துறை, மின்வாரியம், வனம், மாசுக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post மாட்டுச் சந்தைகளில் அடிப்படை வசதி ஏற்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: