நாற்று பாவும் பணியில் விவசாயிகள் நெல்லை, தூத்துக்குடியில் பிசான பருவ நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

*அணை தண்ணீர் திறப்பால் விவசாயிகள் உற்சாகம்

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் பிசான பருவ நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நாற்றங்காலில் இருந்து நாற்றுக்களை எடுத்து வந்து நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பிசான பருவ நெல் சாகுபடியும், தென்மேற்கு பருவமழை காலத்தில் கார் பருவ நெல் சாகுபடியும் மேற்கொள்ளப்படும். வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை கிடைக்கும். இதனால் பிசான நெல் சாகுபடி தான் கை கொடுக்கும். இதற்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை வடக்கு, தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், கன்னடியன் கால்வாய், நதியுன்னி கால்வாய், கோடகன் கால்வாய், நெல்லை கால்வாய், பாளையங்கால்வாய் என 7 கால்வாய்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் தென்கால், வடகால் என 4 கால்வாய்களுமாக மொத்தம் 11 கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்களில் பிசான பருவ நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விவசாயிகள் தங்கள் நிலங்களை சீர்படுத்தி உழவு செய்து வருகின்றனர். உழவு முடித்த விவசாயிகள் பிசான பருவ நெல் சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். பிசான பருவத்திற்காக 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நாற்றங்காலில் வளர்ந்த நாற்றுக்களை எடுத்து நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பிசான சாகுபடிக்காக 41 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், பத்தமடை, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், சுத்தமல்லி, பேட்டை, தருவை, முன்னீர்பள்ளம் குலவணிகர்புரம், பாளையங்கோட்டை, மணிமூர்த்தீஸ்வரம், திருவண்ணாதபுரம், கீழநத்தம், மானூர் ஆகிய பகுதிகளில் நாற்று நடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கான கூலியாட்களை அமர்த்தி நடவு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 40 சதவீதம் விவசாய நிலங்களில் நெல் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள நிலங்களில் நடவு செய்யும் ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் தென்கால், வடகாலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை, மணத்தி, குருகாட்டூர், ஏரல், ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், ராமானுஜம்புதூர், செய்துங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் பிசான பருவ நெல் சாகுபடிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பிசான பருவ நெல் சாகுபடிக்காக யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள் வேளாண்மை துறை சார்பில் ரயில் வேகன்களில் கொண்டு வரப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனினும் நெல்லை மாவட்டத்தில் டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்களுக்கு தட்டுப்பாடாக உள்ளது. டிஏபி 75 சதவீதமும், காம்ப்ளக்ஸ் உரங்கள் 40 சதவீதமும் மட்டுமே தற்போது இருப்பில் உள்ளன. இதற்காக ஒடிசாவில் இருந்து உர மூடைகள் ரயில் வேகன்கள் மூலம் நெல்லைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நெல்லை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) சந்திரபோஸ் கூறுகையில், நெல்லை மாவட்டத்திற்கு தற்போதைய நிலையில் 2 ஆயிரத்து 100 டன் யூரியா தேவை. ஆனால் 4 ஆயிரம் டன் இருப்பில் உள்ளது. டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையை சமாளிக்க தலா 800 மெட்ரிக் டன் ரயில் வேகன்கள் மூலம் கங்கைகொண்டான் வர உள்ளது.

இந்த உரங்களில் தலா 600 மெட்ரிக் டன் கூட்டுறவு சங்கங்களுக்கும், 200 மெட்ரிக் டன் தனியார் உரக் கடைகளுக்கும் பிரித்து வழங்கப்படும். இது தவிர எம்எப்எல் உரங்களும் வர உள்ளது. எனவே பிசான நெல் சாகுபடிக்கு உரத் தட்டுப்பாடு ஏற்படாது என்றார்.

சவால் விடும் பறவைகள்

நெல் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், கூலித் தொழிலாளர்களுக்கு சவாலாக புறாக்கள் உள்ளிட்ட பறவை இனங்கள் உள்ளன. இவை விவசாயிகளின் விதைகள், நெல் மணிகளை உணவாக்கி வருகின்றன. இதனால் விதைக்கும் விவசாயிகளுக்கு பறவைகள் பெரும் சவாலாக உள்ளன.

The post நாற்று பாவும் பணியில் விவசாயிகள் நெல்லை, தூத்துக்குடியில் பிசான பருவ நெல் சாகுபடி பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: