விருத்தாசலம் அருகே மகளை அடித்து கொன்றதாக தாய் புகார்

*காவல் நிலையம் முற்றுகையால் பரபரப்பு

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் மகளை அடித்துக்ெகான்றதாக தாய் புகாரைத்தொடர்ந்து உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பரவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தான் மகன் பத்மநாபன்(34). கோமங்கலத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா(21). இருவருக்கும் கடந்த 14 மாதத்திற்கு முன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் திருமணத்திற்கு வேண்டிய அனைத்து சீர் வரிசைகளும் கவிதாவின் பெற்றோர் கொடுத்து திருமணம் நடத்தியுள்ளனர். ஆனால் பத்மநாபன் மேலும் வரதட்சணை கேட்டு கவிதாவை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக கவிதா அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அவரது பெற்றோர் மீண்டும் வந்து சமாதானம் செய்து வைத்து கவிதாவை பத்மநாபன் வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கவிதாவின் தாய் கலையரசியின் செல்போனுக்கு பத்மநாபனின் சகோதரர் வெங்கடேசன் என்பவர் கவிதா இறந்துவிட்டதாக தகவல் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கலையரசி மற்றும் உறவினர்கள் பரவலூருக்கு சென்று பார்த்தபோது கவிதாவின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்துள்ளன.

இதனால் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அங்கு விருத்தாசலம் போலீசார் சென்று கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கவிதாவின் உறவினர்கள் விருத்தாசலம் காவல் நிலையத்தில் திரண்டனர்.

அப்போது கவிதாவை அவரது கணவர் பத்மநாபன் மற்றும் அவரது தாய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அடித்துக் கொன்றதாகவும், மேலும் கடந்த பல நாட்களாக கவிதாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாகவும், அதன் காரணமாகத்தான் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும், இதனால் பத்மநாபனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்தனர்.

தற்போது சந்தேக மரணம் என வழக்கு பதியப்பட்டுள்ளது. அதனால் விசாரணை செய்துதான் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் போலீசார் கூறினர். ஆனாலும் இதனை ஏற்றுக் கொள்ளாமல் கவிதாவின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post விருத்தாசலம் அருகே மகளை அடித்து கொன்றதாக தாய் புகார் appeared first on Dinakaran.

Related Stories: