கல்வராயன்மலை : கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் பள்ளி நேரத்தில் மாணவர்கள் விறகு எடுத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலைப்பகுதியில் பழங்குடியினர் நலத்துறை கீழ் 50க்கும் மேற்பட்ட உண்டு உறைவிட அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன.
கல்வராயன்மலை எழுத்தூர் பகுதியில் உள்ள அரசு மலைவாழ் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில், எழுத்தூர், விளாம்பட்டி, புதூர், நாரணபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பள்ளியில் வகுப்பு நேரத்தில் மாணவ, மாணவிகள் விறகு எடுத்துச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு மாணவனின் காலில் அடிபட்டு ரத்தம் வழிந்தோடும் காட்சியும் உள்ளது. இந்த வீடியோவால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 5 நாட்களுக்கு முன் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக
தகவல் பரவி வருகிறது.
ஏற்கனவே கல்வராயன்மலை பள்ளியில் மாணவ மாணவிகள் சமையல் பாத்திரங்களை கழுவும் வீடியோ வெளியாகி, தலைமையாசிரியர், சமையலர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் பள்ளியில் மாணவர்கள் விறகு எடுத்து செல்லும் வீடியோ வெளியாகி கல்வராயன்மலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post கல்வராயன்மலையில் மீண்டும் பரபரப்பு பள்ளியில் விறகு எடுத்து செல்லும் மாணவர்கள் appeared first on Dinakaran.