தேன்கனிக்கோட்டை, நவ. 30: கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி மற்றும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வந்துள்ளன.
இந்த யானைகள் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்கம், சானமாவு வனப்பகுதி என நான்கு பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டு ராகி, துவரை, அவரை, தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர், ஆலஹள்ளி, தாவரகரை வனப்பகுதியில் 10 யானைகள் உள்ளன. கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை, ராகி வயல்களில் முகாமிட்டு பயிர்களை நாசம் செய்து வருகிறது.
ஏணிமுச்சந்திரம் கிராமத்தில், வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் விவசாய நிலத்தில், தொங்கும் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை, ஒற்றை யானை அங்கு சென்றது. விவசாய நிலத்தில் இருந்த தொங்கும் சோலார் மின்சார வேலியை தாண்டி, ராகி வயல்களுக்கு செல்ல முயற்சி செய்தது.
ஆனால் அதை கடந்து செல்ல முடியாமல் சுற்றி சுற்றி வந்தது. நீண்ட நேரம் அங்கேயே தவித்தபடி நின்று, ராகி வயலை பார்த்தபடி இருந்தது. அதை எதிர்புரத்தில் இருந்து பார்த்த ஒருவர், சோலார் மின்சார வேலி அருகே நின்றிருந்த யானையை பார்த்து ஐயப்பா, ஐயப்பா, சாமியே சரணம் ஐயப்பா, கணேசா, ஈஸ்வரா, சரணம் கணேசா என பாடல் பாடுகிறார். இதை இப்பகுதியில் உள்ளவர்கள், தங்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். அது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.
The post தேன்கனிக்கோட்டை அருகே மின்வேலியை கடக்க முடியாமல் தவித்து நின்ற ஒற்றை யானை appeared first on Dinakaran.