காதலி வீட்டில் டிரைவரை அடித்து கொன்றதாக உறவினர்கள் மறியல்

*சேலம்-சென்னை சாலையில் போராட்டத்தால் பரபரப்பு

ஆத்தூர் : ஆத்தூரில் காதலி வீட்டிற்கு சென்ற இடத்தில், டிரைவரை அடித்து கொலை செய்து விட்டதாக கூறி, அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அரசநத்தம் ஊராட்சி கோவிந்தராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துபிரபு(27). டிரைவரான இவருக்கும், காட்டுக்கோட்டை பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 27ம் தேதி, முத்துபிரபு வழக்கம்போல், தகாத உறவு காதலி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த தோழியின் அக்கா கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது.

இதில், படுகாயமடைந்த முத்துபிரபு உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஆத்தூர் ஊரக போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று காலை, முத்துபிரபுவின் உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டனர். அப்போது, முத்துபிரபுவை அடித்து கொலை செய்து விட்டதாக குற்றம்சாட்டினர். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி சேலம்-சென்னை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையிலான போலீசார், சம்பவ இடம் விரைந்து சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திடீரென மறியலில் ஈடுபட்ட 6 இளைஞர்களை, வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் கூச்சலிட்டவாறு, போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.

இதில் ஒரு சிலரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, சிலர் வாகனத்தின் முன் படுத்து உருண்டனர். அவர்களை அப்புறப்படுத்திய போலீசார், 6 பேரை விசாரணைக்காக வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இந்த சாலை மறியலால், அந்த வழியாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post காதலி வீட்டில் டிரைவரை அடித்து கொன்றதாக உறவினர்கள் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: