கடலூர் : கல்வி கடனை வட்டியுடன் செலுத்தியும் வீட்டு பத்திரத்தை தராத வங்கி முன், மருத்துவர் தனது பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது கடலூர் மாவட்டம் வீ.காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி.
இவரது மனைவி எழிலரசி. இவர்களது மகன் முருகன். இவர் பிடிஎஸ் மருத்துவ கல்வி படிப்பதற்காக கடலூரில் உள்ள தேசிய வங்கியை அணுகி கடந்த 2015ம் ஆண்டு ரூ.15 லட்சம் கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த கடனுக்கான அசல் மற்றும் வட்டியை சேர்த்து, ரூ.24 லட்சத்தை கடந்த 2021ம் ஆண்டு முருகன் குடும்பத்தினர் அடைத்துள்ளனர். இதன் பிறகு அதற்கான தடையில்லா சான்றும் வங்கி மூலம் கொடுக்கப்பட்டு அதையும் வைத்துள்ளனர்.
கடன் கட்டி முடித்து பைசல் செய்யப்பட்ட பிறகும், கடந்த 3 ஆண்டுகளாக அவர்களின் வீட்டு மூல பத்திரத்தை வாங்கி வைத்துக்கொண்டு திரும்ப தராமல் வங்கி நிர்வாகத்தினர் அலைக்கழித்து வந்துள்ளனர். இது குறித்து முருகனின் குடும்பத்தினர் கடலூர் மாவட்ட எஸ்பி மற்றும் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் புகார் செய்துள்ளனர்.
ஆனால் வங்கி நிர்வாகத்தினர் வீட்டு பத்திரத்தை திரும்பித் தர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகனின் குடும்பத்தினர், நேற்று காலை வங்கி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வங்கியை திறக்க வந்த ஊழியர்களையும் அவர்கள் திறக்க விடாமல் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முருகனின் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் வீட்டு பத்திரத்தை தராமல் வைத்துள்ளனர், என் வீட்டு பாத்திரத்தை தரும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம், என்று கூறினர்.அப்போது போலீசார் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்துவிட்டு வங்கி நிர்வாகத்தில் நீங்களே பேசிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரத்தை திரும்பி தருவதாக வங்கி நிர்வாகத்தினர் கூறியதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் நேற்று காலை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.கடலூரில் உள்ள வங்கி நிர்வாகத்தினர், முருகன் குடும்பத்தாரிடம் அவர்களின் வீட்டு மூல பத்திரத்தை வாங்கி கடன் கொடுத்துள்ளனர். கடனை அடைத்த பிறகு பத்திரத்தை திரும்பி கொடுக்க முயற்சித்தபோது அந்த பத்திரம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. அப்போது இருந்த மேலாரும் தற்போது மாற்றலாகி சென்று விட்டார்.
தற்போது பொது மேலாளர் வந்துள்ளதால் இந்த விஷயத்தை முருகன் குடும்பத்தாரிடம் கூறாமல் மழுப்பலாக பதில் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளனர். அந்தப் பத்திரத்தின் நகல் வாங்குவதற்கு ரூ.40,000 செலவாகும் என்று கூறப்படுகிறது. இதனால் வங்கி நிர்வாகத்தினர் நகல் பத்திரம் வாங்காமல் இருந்துள்ள நிலையில், விரைவில் நகல் பத்திரம் வாங்கித் தருகிறோம் என்று கூறியதன் பேரில் முருகன் குடும்பத்தினர் அங்கிருந்து சென்றனர்.
The post கடனை வட்டியுடன் செலுத்தியும் வீட்டு பத்திரம் வழங்காத வங்கி முன் குடும்பத்துடன் மருத்துவர் போராட்டம் appeared first on Dinakaran.