அரியலூர், நவ. 30: 2024 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு டிசம்பர் 20ம் தேதிக்குள் தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000 (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தேர்வு செய்யப்படுகிறார். 2024 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன்பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கலாம். தங்களது விண்ணப்பம், சுய விவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
2024 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 20 ஆகும். மேற்படி தகுதியுடைய நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.
The post சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது: விண்ணப்பிக்க டிச. 20 கடைசி appeared first on Dinakaran.