×

முக்கிய வழக்குகளில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: நீதிமன்றங்களில் முக்கிய வழக்குகளில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் கூறி, அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, 10 மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. மாவட்ட கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் 5 மாவட்ட கலெக்டர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மனுதாரர் என்ற முறையில், பொதுத் துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பொதுத் துறை செயலாளர் நேரில் ஆஜராகி இருந்தார்.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர் ஆஜராகாததற்கு மன்னிப்பு கோரினார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார். இதையடுத்து நீதிபதி, வழக்குகளை தேர்ந்தெடுத்து அந்த வழக்குகளில் மட்டும் ஆஜராக அரசு வழக்கறிஞர்கள் ஆர்வம் காட்டுவது வழக்கமாக உள்ளது. இதனால் பொதுமக்களே பாதிப்படைகிறார்கள். உதாரணமாக, அரசு வழக்கறிஞர்களின் இதுபோன்ற செயல்பாட்டால், கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் மட்டும் இதுவரை அரசுக்கு சுமார் 1100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் வரிப்பணம் மூலமாக தான் அரசு வழக்கறிஞர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதை அவர்கள் உணர வேண்டும். தவறு செய்யும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை போல் முக்கிய வழக்குகளில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தனர். அடுத்த முறை செயலாளர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post முக்கிய வழக்குகளில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : High Court ,Tamil Nadu Govt. ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu ,
× RELATED மாஞ்சோலை தேயிலை தோட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்