கோவளம் கடற்கரையில் மீட்கப்பட்ட படகுகள் பாதுகாப்பான இடங்களில் வைப்பு

திருப்போரூர், நவ.30: பெங்கல் புயல் எதிரொலியால் கோவளம் கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட 200 படகுகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 27ம் தேதி முதல் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள பெஞ்சல் புயல் நேற்று மாலை தொடங்கி இன்று காலைக்குள் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து செங்கல்பட்டு, விழுப்புரம், சென்னை போன்ற மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை அபாயம் விடுக்கப்பட்டு ஆரஞ்ச் மற்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் மீனவர் பகுதியில் உள்ள 250க்கும் மேற்பட்ட மீனவர்களின் மீன்பிடி படகுகள் கடந்த 3 நாட்களாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று மீன் வளத்துறை அறிவித்து படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தியது. மேலும், நேற்று பிற்பகல் 2 மணி முதல் கடல் அலைகள் 10 அடி உயரத்திற்கு எழும்பியது. இதையடுத்து, கோவளம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் தலைவர் சோபனா தங்கம் சுந்தர் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2 பொக்லைன் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு மீனவர்கள் உதவியுடன் கடற்கரையோரம் கயிறு கட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 180 படகுகள் பாதுகாப்பான பகுதிக்கு இழுத்து வரப்பட்டு கட்டி வைக்கப்பட்டது.

The post கோவளம் கடற்கரையில் மீட்கப்பட்ட படகுகள் பாதுகாப்பான இடங்களில் வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: