இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த தாழ்வு மண்டலம் 30ம் தேதி காலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், அது நகர்ந்து வரும் வேகம் 9 கி.மீட்டராக இருந்தது. பின்னர் அது 7 கி.மீட்டராக வேகம் குறைந்து நகர்ந்துவந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறாமல் வலுவிழக்கும் என்றும் நேற்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வளி மண்டல காற்று சுழற்சியில் கீழ் பகுதியில் காற்று குவிதல், மேல் பகுதியில் காற்று விரிவடைதல் போன்ற நிகழ்வின் காரணமாக அது மேலும் வலுவடைந்து புயலாக மாறும் வாய்ப்புள்ளது என்றும் நேற்று காலையில் கணிக்கப்பட்டது. அதற்கேற்ப நேற்று மதியம் 2.30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அது இன்று(30ம் தேதி) பிற்பகலில் காரைக்கால்- புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யத்தொடங்கியது.
வங்கக் கடலில் புயல் உருவானது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: வங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. ‘பெஞ்சல்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் புதுச்சேரிக்கு தென் கிழக்கே சுமார் 270 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது இன்று காரைக்காலுக்கும்- மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரிக்கு அருகில் பிற்பகல் நேரத்தில் புயலாகவே கரையைக் கடக்கும்.
இதன் காரணமாக ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டஙகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் சில இடங்களில் அதிகனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
மேலும், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் (ரெட் அலர்ட்), திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், தஞ்சாவூர், மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திருப்பத்தூர், தர்மபுரி, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. பெஞ்சல் புயல் இன்று கரையைக் கடக்கும் போது, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 கிமீ வேகம் முதல் 80 கிமீ வேகம் வரையும், இடையிடையே 90 கிமீ வேகத்திலும் வீசும். மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
வட கிழக்கு பருவமழையை பொருத்தவரையில் அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரையில் 351 மிமீ பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பாக 350 மிமீ பெய்ய வேண்டும். தற்போது 1 சதவீதம் இயல்பைவிட கூடுதலாக பெய்துள்ளது.
இந்த ‘பெஞ்சல் புயல்’ நிலை குறித்து மாற்றங்கள் சில நிகழ்ந்துள்ளன. குறிப்பாக 26ம் தேதி 27ம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியை பொருத்தவரையில் வளிமண்டல காற்று சுழற்சியின் கீழ் பகுதி மற்றும் மேல் பகுதியில் விரிவடைதல், நடுப்பகுதியில் ஈரப்பதம் போன்ற பல சூழ்நிலைகளை நாம் பார்க்க முடிந்தது. 26, 27ம் தேதிகளில் இது போன்ற நிகழ்வு அதிகரித்தபடி இருந்தது.
பிறகு அதன் வேகம் படிப்படியாக அதிகரித்து இப்போது(29ம்தேதி) 10 கிமீ வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. அது நிலை கொண்டு இருந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லத் தொடங்கியதும் அதில் கீழ் பகுதியில் காற்று குவிதல் அதிகரிக்கத் தொடங்கியதுடன் ஈரப்பதமும் கூடியது. அதனால், மீண்டும் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டில் வங்கக் கடலில் உருவான இந்த புயல் உருவாவதற்கு பல மாற்றங்களில் வேறுபாடு இருந்தது. நேரத்துக்கு நேரம் மாற்றம் இருந்தது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு இப்போது புயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் மெதுவாக நகரும் தன்மை கொண்டதாக இருப்பதால், மழை பெய்வதும் துல்லியமாக கணிக்க முடியாது. அதனால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
* சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை; பொது போக்குவரத்துக்கு தடை
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை இன்று வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். இன்று பிற்பகல் புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
* சென்னை பல்கலை தேர்வு ஒத்திவைப்பு
பெஞ்சல் சூறாவளி மற்றும் கனமழை காரணமாக இன்று நடத்தப்பட இருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனம், இளங்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 14ம் தேதியன்று நடத்தப்படும்.
The post இரண்டு நாட்களாக போக்கு காட்டி வந்த பெஞ்சல் புயல் உருவானது: புதுச்சேரி அருகே இன்று கரை கடக்கிறது; 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்; சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் appeared first on Dinakaran.