×
Saravana Stores

மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி ஒன்றிய அரசை கண்டித்து கடையடைப்பு, ஆர்ப்பாட்டம்: அமைச்சர் பேச்சை தொடர்ந்து போராட்டம் ஒத்திவைப்பு

* 5 ஆயிரம் பேர் திரண்டதால் பரபரப்பு
* வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

மேலூர்: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதித்த ஒன்றிய அரசை கண்டித்து, மேலூரில் நேற்று 5 ஆயிரம் பேர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடைகள் அடைக்கப்பட்டன. வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர். அமைச்சரின் பேச்சை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக வேதாந்தாவின் ஜிங்க் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சுரங்கம் அமைந்தால் தமிழக அரசு பாரம்பரிய தலமாக அறிவித்த அரிட்டாப்பட்டி உட்பட சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கும் எனக்கூறி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். நேற்று முல்லை பெரியாறு ஒருபோக பாசன சங்க விவசாயிகள் சங்கத்தினர் சார்பில், மேலூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு மாபெரும் கண்டன பொது ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மேலூரை சுற்றியுள்ள அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி, கிடாரிபட்டி, கல்லம்பட்டி, மாங்குளம், கள்ளந்திரி, மேலவளவு, சூரக்குண்டு, சுக்காம்பட்டி, எட்டிமங்கலம், நரசிங்கம்பட்டி, தெற்குத்தெரு, புலிபட்டி, கூழான்பட்டி, மாத்தூர், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 1,000 பெண்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஆதரவாக, மேலூரில் வணிகர் சங்கம் சார்பில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. மேலூர் வழக்கறிஞர் சங்கத்தினரும் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், அதிமுக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மேலூர் தொகுதி எம்எல்ஏ பெரியபுள்ளான், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசும்போது, ‘‘ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதிமுக தீர்மானம் கொண்டு வந்தால் சட்டசபையில் நிறைவேற்றப்படும்’’ என்றார். அமைச்சரின் பேச்சை தொடர்ந்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை பொறுத்து அடுத்தக்கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என விவசாய சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

The post மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி ஒன்றிய அரசை கண்டித்து கடையடைப்பு, ஆர்ப்பாட்டம்: அமைச்சர் பேச்சை தொடர்ந்து போராட்டம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : union government ,Melur ,Mellur ,Dinakaran ,
× RELATED டங்ஸ்டன் கனிமச் சுரங்க அறிவிப்புக்கு...