×
Saravana Stores

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள், பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

சென்னை: சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று காலை வந்தார். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,229 நிவாரண மைய கட்டிடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தற்போது திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 6 நிவாரண முகாம்களில், 164 குடும்பங்களை சேர்ந்த 471 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஜேசிபி, படகுகள், ஜெனரேட்டர்கள், மர அறுப்பான்கள், மோட்டார் பம்புகள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படைகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், நேற்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் 1 குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் தலா 1 குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மீன்வளத்துறை இயக்குநருக்கும், கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடந்த 23ம் தேதியே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரையில் மீன்பிடிக்க சென்ற 4,153 படகுகள் கரை திரும்பியுள்ளன. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி, நேற்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, பேரிடர் மேலாண்மை இயக்குநர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள், பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,KKSSR ,Ramachandran ,CHENNAI ,Revenue and Disaster Management ,KKSSR Ramachandran ,State Emergency Operations Center ,Ezhilakam, Chennai ,Monitoring Officers ,Disaster Response Force ,Dinakaran ,
× RELATED சென்னை ஏரிகளில் இருந்து தண்ணீர்...