அண்ணாநகர்: திருமணம் செய்வதாக ஆசை கூறி ஜார்க்கண்ட ஐ.டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்தும் பணம் பறித்தும் தாக்கிய விவகாரத்தில் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து நகை, விலை உயர்ந்த செல்போன், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண், கடந்த 20ம் தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த பாண்டுராஜ் (28) என்பவருக்கும் எனக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக நீண்ட நாட்களாக பழகி வந்தோம். நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில், ‘என்னை ரொம்ப பிடித்திருக்கிறது, திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று பாண்டுராஜ் கூறினார். இப்படியே 3 வருடம் கடந்து விட்டது. இப்படியே காதலித்து வந்தால் எப்போதுதான் என்னை திருமணம் செய்துகொள்வாய் என்று கேட்டேன்.
அதற்கு அவர், ‘திருமணத்திற்கு என்ன அவசரம்’ என்று கோபத்துடன் அலட்சியமாக கூறினார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென பாண்டுராஜ், ‘எனக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி விட்டது. உன்னை மறுபடியும் திருமணம் செய்ய முடியாது’ என கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்து கதறி அழுதேன். ‘இனி நான் என்ன செய்ய’ என்று கேட்டதற்கு, ‘என்னால் ஒன்றும் செய்ய முடியாது, முடிந்தால் என்னுடன் வாழ்ந்து கொள்’ என்றார். என்னை ஏமாற்றி வாங்கிய பணம், நகையை திருப்பி கொடு, இல்லை என்றால் காவல் நிலையத்தில் புகார் அளித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை கூறி பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ எனது செல்போனில் உள்ளது. ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளிப்பேன் என கூறினேன்.
இதனால் ஆத்திரமடைந்த பாண்டுராஜ், என்னை சரமாரி தாக்கி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பினார். மறுநாள் எனது வீட்டிற்கு மனைவியுடன் வந்து தகராறு செய்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரும் பீர் பாட்டிலால் என்னை தாக்கி செல்போனில் உள்ள ஆதாரங்களை அழித்துவிட்டு செல்போன், லேப்டாப்பை பறித்து சென்றனர். எனவே, என்னை தாக்கிவிட்டு தப்பிய தம்பதி மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி விசாரணை நடத்தி பாண்டுராஜ் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல், ஆபாசமாக பேசியது, பணம் மோசடி உட்பட 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தம்பதியை கைது செய்ய வீட்டிற்கு சென்றபோது தலைமறைவாகிவிட்டனர்.
தனிப்படை போலீசார் தேடியபோது, அவர்களது செல்போன் நம்பர் சென்னை முகப்பேர் பகுதியை காட்டியது. நேற்றிரவு தனிப்படை போலீசார் விரைந்து சென்று ஒரு வீட்டில் பதுங்கி இருந்த தம்பதியை கைது செய்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களிடம் இருந்து தங்க நகை, விலை உயர்ந்த செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தம்பதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஜார்க்கண்ட் ஐ.டி. பெண் பலாத்காரம்; பீர்பாட்டிலால் தாக்கி பணம் பறிப்பு: தம்பதி கைது appeared first on Dinakaran.