காவலர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தும் சிறைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை :சிறைத்துறை டிஜிபி

சென்னை: சிறைக்காவலர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தும் சிறைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறைத்துறை டிஜிபி உறுதி அளித்துள்ளார்.புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி சுஜாதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ஒரு அறையில் 60 கைதிகள் வரை அடைக்கப்பட்டுள்ளதாகவும், புழல் சிறையில் ஒரு ஷிப்டுக்கு 60 வார்டன்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 15 வார்டன்கள் மட்டுமே உள்ளதாகவும், மீதமுள்ள வார்டன்கள் ஆர்டர்லியாக சிறைத்துறை அதிகாரிகளின் வீட்டு வேலைகளை செய்ய பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க வேண்டுமென டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஐகோர்ட்டில் அரசு தகவல் அளித்தது. இதைத் தொடர்ந்து, சிறைக் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத்துறை டிஜிபி உறுதி அளித்தார். இதையடுத்து, காவலர்களை வீட்டு வேலை, தனிப்பட்ட வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் பற்றி விசாரித்து அறிக்கை தர டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post காவலர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தும் சிறைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை :சிறைத்துறை டிஜிபி appeared first on Dinakaran.

Related Stories: