×

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா

எனக்கு 53 வயதாகிறது. மெனோபாஸ் தொடங்கிவிட்டது. உடல் எப்போதும் மிகவும் சோர்வாக உள்ளது. நான் சப்ளிமெண்ட்டுகள் எடுத்துக்கொள்ளலாமா? எனில், எந்தெந்த சப்ளிமென்ட்கள் எனக்குத் தேவை?
– ஒரு வாசகி, விருத்தாசலம்.

மெனோபாஸ் என்பது பெண்களின் மாதவிடாய் முழுவதுமாக நிற்கும் ஒரு காலகட்டம். இது, பொதுவாக பெண்களுக்கு 45 முதல் 50 வயதினில் ஏற்படும். இந்த மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால், பெண்களுக்குப் பலவிதமான மன மற்றும் உடல் சார்ந்த மாற்றங்கள் நிகழும். உடலில் ரத்த நாளங்களில் மாற்றம் ஏற்படும். அது சார்ந்த அறிகுறிகள் தோன்றும். ஈஸ்ட்ரோஜன் வெளியேற்றத்தால் மனஅழுத்தம், சோர்வு, எரிச்சல், தூக்கமின்மை, அதிக அளவிலான வியர்வை போன்றவை ஏற்படும். இந்தத் தருணங்களில் குடும்பத்தினரின் ஆதரவும் மற்றும் அவர்களின் ஒத்துழைப்பே சிறந்த மருந்தாகும்.

மருத்துவர் பரிந்துரையின்படி தினமும் வைட்டமின்-இ 400 எடுத்துகொள்வது நல்லது. வைட்டமின்-டி மற்றும் கால்சியம் எலும்புத் தேய்மானத்தைத் தடுகிறது. கடுமையாக பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு மட்டும் ஹார்மோன் மாற்றுசிகிச்சை செய்யப்படுகிறது. இவர்களுக்கு தினமும் ப்ரிமரின் (PREMARIN) 0.625mg அல்லது 1.25mgs போன்ற ஈஸ்ட்ரோஜன்கள் மற்றும் மேட்ராக்ஸிப்ரோகெஸ்ட்ரோன் (MEDROXYPROGESTRONE) ஒவ்வொரு சுழற்சியின் கடைசி 10 நாட்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆனால், இதெல்லாம் கடும் பாதிப்பு உடையவர்களுக்குத்தான். உங்கள் வீட்டருகே உள்ள மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

என் கணவருக்கு கடந்த ஒரு வாரமாய் காய்ச்சல் இருந்தது. காலும் வீங்கிக்கொண்டே இருந்தது. மருத்துவரிடம் சென்றபோது அவர் சில பரிசோதனைகளுக்கு எழுதிக் கொடுத்தார். முடிவில், அவருக்கு பெரிகார்டிடிஸ் (Pericarditis) உள்ளதென மருத்துவர் சொல்கிறார். பெரிகார்டிடிஸ் என்பது என்ன நோய்? இதற்கு சிகிச்சை என்ன?
– கோ.ராதா சரவணன், திருநின்றவூர்.

இதயத்தைச் சுற்றி இருக்கும் பாய்மம் (Fluid) நிறைந்த இதயவுறையில் ஏற்படும் அழற்சியை பெரிகார்டிடிஸ் என்பார்கள். தமிழில் இதயஉறை அழற்சி என்போம். ஒரு தனித்துவமான நெஞ்சுவலி பொதுவாக ஏற்படும். இது ஒரு பரவலான இதயநோய்.

இதில் மூன்று முக்கிய வகை உண்டு:கடும் இதயவுறையழற்சி – நோயறிகுறிகள் மூன்று மாதங்களுக்குள் மறையும் (சிகிச்சை அளித்தால் பொதுவாக ஒரு வாரத்திலேயே குணமடையும்).
தொடர்ந்துவரும் இதயஉறையழற்சி – சிலருக்கு மீண்டும் மீண்டும் கடும் இதய உறை அழற்சி ஏற்படலாம்.நீடித்த இதயவுறையழற்சி – இதய உறை அழற்சியில் உண்டாகும் ஒரு சிக்கலால் நோயறிகுறிகள் மூன்று மாதத்துக்கு மேலும் நீடிக்கும்.

முதுகுப் பகுதியில், தோள்பட்டை எலும்பின் அடியில் பரவும் கடுமையான, குத்தும், நெஞ்சு வலியே கடும் இதயஉறையழற்சியின் மிகப் பொதுவான அறிகுறியாகும். உட்கார்ந்த நிலையில் முன்புறம் குனிந்தால் இவ்வலி குறையும். படுக்கும் போது அல்லது மல்லாந்து படுக்கும்போது அல்லது மூச்சை உள்ளிழுக்கும் போது வலி அதிகரிக்கும்.

பிற அறிகுறிகளில் அடங்குவன:

அதிக காய்ச்சல்
மூச்சடைப்பு
களைப்பு
குமட்டல்
வறட்டு இருமல்
கால்கள் அல்லது வயிறு
வீங்குதல்

இதயஉறையழற்சியின் சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் பெரும்பாலும் கீழ்வரும் தொற்றுக்களுடன் தொடர்புடையதாக இருக்கும்:
நெஞ்சுச்சளி அல்லது நிமோனியாவை உண்டாக்கும் எக்கோவைரஸ் (echovirus) அல்லது காக்சேக்கி வைரஸ் (coxsackie) போன்றவையால் ஏற்படும் தொற்றுக்கள் (சிறுவர்களிடம் பரவலாகக் காணப்படும்), இன்ஃபுளுயன்சா ஆகியவை.

பாக்டீரியாவால் உண்டாகும் தொற்றுக்கள் (சிறுபான்மை)

சில பூஞ்சைத் தொற்றுக்கள் (மிகச் சிறுபான்மை)

பிற காரணிகளில் அடங்குவன:

உள்பரவும் செம்முருடு நோய் போன்ற நோய்த்தடுப்பாற்றல் சார்ந்த நிலைகள் (பெண்களிடம் பரவலாகக் காணப்படும்) அல்லது வாதக்காய்ச்சல் இதயக் காயம், (உ.ம்) துளையினால் தொற்று அல்லது அழற்சி உண்டாகுதல்.

புற்று மருந்துகளின் பக்க விளைவு (உ.ம்) வார்ஃபாரின் (warfarin), ஐசோநியாசிட் (isoniazid), ஹெப்பாரின் (heparin) மற்றும் சைக்ளோஸ்போரின் (cyclosporine).அறிகுறிகள், உடல்பரிசோதனை மற்றும் அண்மைக்கால நோய் வரலாறு ஆகியவற்றின் மூலம் இதயஉறை அழற்சியா இல்லையா என்பது உறுதி செய்யப்படும்.மின்னிதயமானி மூலம் நோய் உறுதிசெய்யப்படும், மின்னிதயமானி சோதனையில் மின்முனைகள் தோலின்மீது வைக்கப்பட்டு இதயத்தின் மின் செயல்பாடு அளக்கப்படுகிறது.

நெஞ்சு எக்ஸ்-கதிர் படம், காந்த அதிர்வுப் பிம்பம் (எம்.ஆர்.ஐ) ஊடுகதிர் கணினி வரைவி ஊடுகதிர் (சி.டி.ஸ்கேன்) எதிரொலி இதய மானி – இது கேளா ஒலி சோதனை போன்றதே. இதன்மூலம் இதயம் மற்றும் இதயஉறையின் விவரமான படம் ஒலியலைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. பெரும்பாலும் ஊக்கமருந்தற்ற எதிர் அழற்சி மருந்துகள் (NSAIDs) மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவை அழற்சியைக் குறைக்கின்றன. நெஞ்சுவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கின்றன. கடுமையான நோயாளிகளுக்குக் கீழ்க்கண்ட மருத்துவம் தேவைப்படும்:

இறுக்கமான இதயஉறை அழற்சிக்கு, இதயஉறை அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது. நீடித்த இதயஉறை அழற்சியில் இரு முக்கிய வகைகள் உள்ளன:

நீடித்த இதயஉறைக் கசிவு – இதயவுறையின் உட் பகுதியில் மிகையாகப் பாய்மம் சேர்தல்.

நீடித்த இதயவுறை இறுக்கம் – வடுக்களினால் இதயவுறைத் திசுக்கள் கெட்டியாதால்.

இதய நெரிப்பு: அழற்சியின் காரணமாக இதயஉறைக்குள் அதிகமாகப் பாய்மங்கள் தேங்கலாம். இதனால் இதய நெரிப்பு ஏற்பட்டு இதயத்தால் இரத்தத்தை உடலின் பாகங்களுக்கு தகுந்த முறையில் செலுத்த இயலாமல் போகலாம். இதுவே இதய நெரிப்பு என அழைக்கப்படுகிறது.

என் வயது 35. நான் கடந்த பதினைந்து வருடங்களாக ஓட்டுநராக இருக்கிறேன். கடந்த ஒரு மாத காலமாக என் முழங்கைப் பகுதியில் வலி ஏற்படுகிறது. வலி நிவாரணிகள் எடுத்துக்கொண்டால் சிறிது நேரம் நன்றாக இருக்கிறது. பிறகு, மீண்டும் வலிக்கிறது. எதனால் இப்படி வலி ஏற்படுகிறது? இதற்குத் தீர்வு என்ன?
– ராஜதுரை, மேட்டுப்பாளையம்.

உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னையை ‘‘டென்னிஸ் எல்போ” (Tennis elbow) என்பார்கள். டென்னிஸ் எல்போ பிரச்னை பெரும்பாலும் கையை அதிகம் பயன்படுத்தும் தொழில் செய்பவர்களுக்கு வரும். டாக்டர்கள் இதை, லேட்டரல் எபிகண்டிலிடிஸ் (lateral epicondylitis) என்பார்கள். போதுமான ஓய்வும் ஸ்ட்ரெச்சிங் போன்ற தசையை நெகிழ்த்தும் பயிற்சிகளும் இன்றி, தொடர்ந்து கைகளுக்கு வேலை தருவதால் முழங்கைப் பகுதியில் உள்ள தசைகள் பாதிப்படைகின்றன.

சிலருக்கு, இந்த வலி முழங்கையில் இருந்து மணிக் கட்டு வரை பரவும். வலி மாத்திரைகளால் தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். நிரந்தரத் தீர்வு கிடைக்காது. எலும்புமூட்டு நிபுணரை அணுகி பரிசோதிப்பது நல்லது. டென்னிஸ் எல்போ பிரச்னை தொடக்க நிலையில் இருந்தால் மாத்திரை, மருந்துகள் பிஸியோதெரப்பி, போதுமான ஓய்வின் மூலமே குணப்படுத்திவிடமுடியும். தீவிரமான பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அறுவைசிகிச்சை தேவைப்படலாம்.

The post கவுன்சலிங் ரூம் appeared first on Dinakaran.

Tags : kungum ,Dr. ,Medical ,Prof. ,Muthiah ,Vridthachalam ,Dinakaran ,
× RELATED டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலையில்...