ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

புதுடெல்லி: ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான சொத்து குவிப்பு வழக்கு விவகாரத்தில் தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு மற்றும் அவரது நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.கடந்த 2001-06ம் ஆண்டில், வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். 2006ல் ஆட்சி மாறியதும் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன், சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. மதுரை நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்கை சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றி, 2012ல் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம், குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அனைவரையும் விடுவித்து கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுவித்திருந்தது. இதையடுத்து இந்த உத்தரவை மறுஆய்வு செய்வது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தார் தொடர்புடைய சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இதையடுத்து அவர் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற, சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தது சட்டவிரோதமானது எனக்கூறி அந்த உத்தரவை ரத்து செய்தார். இந்த நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்துள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு எதிராகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தார் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து இந்த வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள், ஹெச்.ராய் மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,\” இந்த விவகாரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கை மீண்டும் தாமாக நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்வந்து விசாரணை நடத்துகிறார். இது சட்டத்திற்கு புறம்பானதாகும் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,\” ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் தனி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக எதிர்மனுதாரர் அடுத்த நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை appeared first on Dinakaran.

Related Stories: